

திருச்சி மாநகரில் பராமரிப்பு இ்ல்லாத நடைபாதை பூங்காவை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்மார்ட் சிட்டி
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி மத்திய அரசால் சீர்மிகு நகர (ஸ்மார்ட் சிட்டி) திட்டம் தொடங்கப்பட்டது. உலகத்தரம் வாய்ந்த நகரங்களை மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளுக்கேற்ப உருவாக்குவதே சீர்மிகு நகரத்திட்டத்தின் நோக்கமாகும்.
5 வருட காலத்தில் இந்தியா முழுவதிலும் இருந்து 100 நகரங்களை சீர்மிகு நகரங்கள் ஆக்க மத்திய அரசு தேர்வு செய்தது. அதில் தமிழகத்தில் 4 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டதில், திருச்சி மாநகராட்சியும் ஒன்றாகும்.
புதைவடிகால்
திருச்சி மாநகராட்சியில் ஸ்டார்ட் சிட்டி திட்டத்தில் முக்கிய திட்டங்களில் புதை வடிகால் திட்டம், அரியமங்கலம் குப்பை கிடங்கு பிரச்சினைக்கு விஞ்ஞான முறையில் தீர்வு காணும் பணி, உய்யகொண்டான் கால்வாய் கரையை மேம்படுத்தும் பணி, தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் பணி, சத்திரம் பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணி, சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் திட்டம், பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி, பஞ்சப்பூர் பகுதியில் தரைமட்ட சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கும் திட்டம், அரசு அலுவலக கட்டிடங்களில் சூரிய ஒளி மேற்கூரை அமைக்கும் பணி திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலா வளர்ச்சி பணிகளான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் ரூ.15 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் மாநகரில் உள்ள பூங்காக்கள் அபிவிருத்திப்பணிக்காக நிதி ஒதுக்கியது. இதில் 16 பூங்காக்கள் மற்றும் 5 போக்குவரத்து திட்டு அழகு படுத்தும் பணியும் அடங்கும். அதன் ஒரு பகுதியாக சாலை ஓரங்களில் நடைபாதை பூங்கா அமைத்து அதில் உடற்பயிற்சி கூடம் கடத்த 5 வருடத்திற்கு முன்பு அமைக்கப்பட்டது. இதில் ஸ்ரீரங்கம், கோ-அபிஷேகபுரம், அரியமங்கலம், பொன்மலை, திருவெறும்பூர் உள்ளிட்ட கோட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் நடைபாதை பூங்கா அமைக்கப்பட்டு அதில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
நடைபயிற்சி
இதில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை, மாலை என இரு வேளைகளில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். இந்த உடற்பயிற்சி கூடம் சரியாக பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பொது மக்கள் கூறிய கருத்து வருமாறு:-
கே.கே.நகர் கிருஷ்ண மூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராம்தாஸ்:- இந்த பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நடைபாதை பூங்கா, உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. முதலில் பொதுமக்கள் அதிக அளவில் இங்கு வருகை தந்து உடற்பயிற்சி மேற்கொண்டனர். அங்கு மாநகராட்சி சார்பில் ஒரு பணியாளரை நியமித்து அவர் தினமும், சரியான நேரத்தில் உடற்பயிற்சி கூடத்தை காலை, மாலை என திறந்து சுத்தம் செய்து வந்தார். தற்போது நாட்கள் செல்ல அந்த பணியாளர் வருவதில்லை. இந்த கூடம் எப்போதும் திறந்தே இருக்கிறது. பொதுமக்களும் வருகையும் குறைந்துள்ளது. மேலும் மழை காலத்தில் சாக்கடை நீர் தேங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல முடியாமல் உள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பராமரிப்பு இல்லை
காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த வங்கி ஊழியர் பிரசாந்த்:- திருச்சி எம்.ஜி.ஆர். சிலை ரவுண்டான பகுதியில் உள்ள சாலை ஓர நடைபாதையில் அமைத்துள்ள உடற்பயிற்சி கூடத்தில் தினமும் வேலை முடிந்து உடற்பயிற்சி மேற்கொள்வேன். இங்கு சரியான பராமரிப்பு இன்றி சில உடற்பயிற்சி மேற்கொள்ளும் உபகரணங்கள் சிதிலமடைந்தும் உடைந்தும் காணப்படுகிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை வேண்டும்.
எண்ணிக்கை குறைந்தது
எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்த வங்கி ஊழியர் மணிகண்டன்:- இந்த உடற்பயிற்சி கூடத்தில் முன்பு பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். காலை, மாலை என இரு வேளைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் வருகை தந்து உடற்பயிற்சி மேற்கொள்வார்கள், மேலும் குடும்ப பெண்கள் நடைபயிற்சி மேற்கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடுவார்கள். தற்போது சரியான பராமரிப்பு இல்லாததால் உடற்பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.