போதிய மழையின்றி, மாடுகளுக்கு தீவனமாகும் மக்காச்சோள பயிர்: விவசாயிகள் கவலை

தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் மக்காச்சோளம் பயிர் கருகியது.
போதிய மழையின்றி, மாடுகளுக்கு தீவனமாகும் மக்காச்சோள பயிர்: விவசாயிகள் கவலை
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் மக்காச்சோளம் பயிர் கருகியது. இதனால் சோகத்தில் மாடுகளுக்கு மக்காச்சோள பயிரை தீவனமாக விவசாயிகள் கொடுக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை

தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளான செந்தாரப்பட்டி, கொண்டையம் பள்ளி, வாழக்கோம்பை, நாகியம்பட்டி, உலிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய தொழிலே பிரதானம் ஆகும். இங்கு ஆண்டுதோறும் மானாவாரி பயிராக, அதிகளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையை நம்பி கடந்த மாதம் வரை மக்காச்சோளத்தை அதிக பரப்பளவில் சாகுபடி செய்தனர். 'எல்நினோ' தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை பொய்த்தது. இதனால் சாகுபடி செய்த மக்காச்சோளம் பயிர்கள், ஈரப்பதம் இல்லாததாலும், அதிக வெப்பத்தாலும் காய்ந்து கருகியதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மக்காச்சோளம் காய்ந்தது

இதனால் வேதனையடைந்த விவசாயிகள் சிலர் காய்ந்த மக்காச்சோள வயலில் கறவை மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். இதுகுறித்து தம்மம்பட்டி கருமாயி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில்,

”ஆண்டுதோறும், தென்மேற்கு பருவமழை காலத்தில் மழையின் ஈரப்பதத்தை பயன்படுத்தி, நிலத்தை உழுது, மக்காச்சோளத்தை விதைப்பு செய்வோம். பின், வடகிழக்கு பருவமழையின் போது மக்காச்சோளம் நன்கு செழிப்புடன் வளர்ந்து மகசூல் கிடைக்கும்.

நடப்பாண்டில் ஒரு மாதத்திற்கு முன்பு நிலத்தை உழுது, மக்காச்சோளத்தை விதைத்தோம். இதற்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவானது. ஆனால், மழை இல்லாததால் மக்காச்சோள பயிர்கள் வளராமல் காய்ந்து போனது. இதனால் சோகத்தில் வேறுவழியின்றி கறவை மாடுகளை, காய்ந்த மக்காச்சோளம் வயலில் கட்டி மேய விடுகிறோம்.”

என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com