31ம் தேதி சென்னையில் மாபெரும் போராட்டம்: வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா அறிவிப்பு

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகள் தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
31ம் தேதி சென்னையில் மாபெரும் போராட்டம்: வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி நடை பெற உள்ளது. தேர்தல் தேதியை கடந்த 15-ந்தேதி மாலை அறிவித்தது முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன்படி ரொக்கமாக ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படுவது தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் சாதாரண மக்கள் அத்தியாவசிய தேவை, மருத்துவ செலவுக்கு கூட பணத்தை எடுத்து செல்வதில் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதேபோல ஆட்டுச்சந்தை, மாட்டுச்சந்தைகளுக்கு ஆடுகள், மாடுகள் வாங்க பணத்தை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதேபோல உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் விலை மதிப்புமிக்க பொருட்களையும் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சோதனையானது தமிழகம் முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேர்தல் பறக்கும் படையால் பறிமுதல் செய்யப்படும் பணம், பொருட்களை உரிய ஆவணங்களை அதிகாரிகளிடம் காட்டி திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த நடைமுறையில் பல சிக்கல்களை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர்.

தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் கமிஷன் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது முதல் நேற்று வரை ரூ.75 கோடி மதிப்பில் பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வியாபாரிகளிடம் பணம் பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக 27ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், 31ம் தேதி சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com