பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக கொண்டவர்கள் நடிகர்கள்: அரசியல்வாதிகளை குற்றம் சொல்வதை ஏற்க முடியாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

மக்கள் பிரச்சினைகள் பற்றி கவலைப்படாமல் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்ட நடிகர்கள், அரசியல்வாதிகளை குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக கொண்டவர்கள் நடிகர்கள்: அரசியல்வாதிகளை குற்றம் சொல்வதை ஏற்க முடியாது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
Published on

திருவொற்றியூர்,

மணலி புதுநகர் அய்யா வைகுண்டசாமி கோவில் தேரோட்டத்தில் பங்கேற்ற, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:-

நேர்மறையான அரசியல் தமிழகத்துக்கு வரவேண்டும். மக்களுக்கு தேவைப்படும் திட்டங்கள் அனைத்தையும் செய்துதர வேண்டும் என்பதே பா.ஜனதாவின் நோக்கம். மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினாலும் தமிழக வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை கொடுத்து கொண்டேதான் இருக்கிறது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மத நம்பிக்கையில் சட்டமும், நீதிமன்றமும் தலையிடக்கூடாது. மக்களின் மத உணர்வுகள், பண்பாடுகளையும் மதிக்கவேண்டும்.

பெண்கள் பாலியல் குற்றத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால் அதை தெரியப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மீடூ இயக்கத்தை எதிர்ப்பவர்கள் பெண்களுக்கு எதிரானவர்கள். மத்திய மந்திரி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு நியாயமான முறையில் விசாரிக்கப்படும். மீடூவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது தீவிரமாக விசாரிக்கவேண்டும்.

மக்கள் பிரச்சினைகள் பல இருந்தும் அவற்றைப்பற்றி கவலைப்படாமல் பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக கொண்ட நடிகர்கள் எல்லாம் இன்று அரசியல்வாதிகளை குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாதது. வாழ்க்கையில் முக்கால்வாசி நேரத்தில் சம்பாதித்த நடிகர்கள் எல்லாம் மக்களுக்காக என்ன செய்தார்கள்?.

நடிகராக இருந்த எம்.ஜி.ஆர். போல இனி எந்த நடிகரும் அரசியலில் பணியாற்ற முடியாது. எம்.ஜி.ஆருடன் கமல்ஹாசனை ஒப்பிடுவது வேடிக்கையானது. எம்.ஜி.ஆருடன் எந்த நடிகர், அரசியல்வாதிகளையும் ஒப்பிட்டுக்கொள்ள முடியாது.

அவருடைய பண்பு எந்த நடிகருக்கும் வராது. கமல்ஹாசன் கல்லூரிகளில் அரசியல் பேசுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். கல்லூரி மாணவர்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு அரசியல் கற்றுகொடுக்கக்கூடாது. கல்லூரி மாணவர்களிடம் அரசியல் செய்யக்கூடாது. தி.மு.க., நடிகர் கமல்ஹாசன் யார் வேண்டுமானாலும் காங்கிரசுடன் கூட்டணி வைத்தால் தோல்வி அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com