

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் போலீஸ் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். பொள்ளாச்சி பயங்கரம் விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தரப்பில் பேரணி நடத்தப்பட்டது. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொள்ளாச்சி துணை ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யத்தினர் மனு அளித்தனர்.
பேரணியில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் ஸ்ரீபிரியா, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட பெண்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஸ்ரீபிரியா பேசுகையில், பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் மத்தியிலும் பொள்ளாச்சி பயங்கரம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, ஏனென்றால் எலோருக்கும் தாய், அக்கா, தங்கை உள்ளனர். இதுபோன்று செய்பவர்களை மனித தன்மைக்கு அப்பாற்பட்டவர்களாகவே பார்க்கிறேன். இது நம்முடைய மகள்களுக்கு நடந்த ஒரு அநீதியாக பார்க்கிறோம். இது, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை காக்க வேண்டும்.
எனென்றால் அவர்களுக்கு என்று நாளை ஒரு எதிர்காலம் இருக்க வேண்டும். தயவு செய்து அவர்களை பற்றிய வீடியோக்கள், புகைப்படங்கள், தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம். இதுபோன்று தொடர்ந்து நடக்கக்கூடாது. சட்டம் ஒரு இருட்டு அறையாக இருக்க கூடாது. குற்றவாளி எந்த பதவியில் இருந்தாலும், யாராக இருந்தாலும் அவர்களை மக்களுக்கு அடையாளம் காட்டி தக்க தண்டனையை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இவ்வழக்கில் நடவடிக்கைகள் தொய்வு இல்லாமல் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.