தி.மு.க. கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் குறிவைக்கும் 15 தொகுதிகள் எவை..?

கோப்புப்படம்
மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
சென்னை,
கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. 0.40 சதவீத வாக்குகளை பெற்றது. 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 180 தொகுதிகளில் போட்டியிட்டு, அனைத்திலும் தோல்வி அடைந்தாலும் 2.62 சதவீத வாக்குகளை பெற்றது.
இந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம், தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தது. ஆனால், தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்படவில்லை என்றாலும், ராஜ்ய சபா சீட் ஒன்று வழங்கப்பட்டது. தற்போது, கமல்ஹாசன் எம்.பி.யாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம், கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், தி.மு.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை கேட்டு பெறுவது, எந்தெந்த தொகுதிகளில் மக்கள் நீதி மய்யத்துக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பேசப்பட்டது.
இறுதியில், 15 தொகுதிகளின் பட்டியலை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்காநல்லூர், வேளச்சேரி, மயிலாப்பூர், மதுரவாயல், அம்பத்தூர், தாம்பரம், சோழிங்கநல்லூர், கவுண்டம்பாளையம், ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு, மதுரை மத்தி, ஆலந்தூர், தியாகராயநகர் ஆகிய தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
ஆனால், தி.மு.க. தலைமையோ, தனது கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு 3 தொகுதிகள் என்று குறித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பிரசாரத்திற்கும் தமிழகம் முழுவதும் கமல்ஹாசனை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளது.






