மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று விருப்ப மனு தாக்கல்

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று விருப்ப மனு தாக்கல் நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இன்று விருப்ப மனு தாக்கல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில், 'நடைபெற இருக்கும் 2021- ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களிலும், நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் காண்கிறது.

சீரமைப்போம் தமிழகத்தை', 'புதியதோர் புதுவை செய்வோம்' எனும் நமது இருபெரும் கனவுகளை நனவாக்க வேண்டிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தருணம் இது. நமது கட்சி நேர்மையாளர்களின் கூடாரம். திறமையாளர்களின் கோட்டை. துணிச்சல் மிக்கவர்களின் பாசறை. நாம்தான் தமிழகத்தின் பாதுகாப்புப் படை.

ஊழலற்ற நேர்மையான ஆட்சியின் மூலமாக, பொருளியலைச் சீரமைத்துத் தமிழகத்தை வளமாக்க முடியும். அதற்குரிய தகுதியும் அருகதையும், திறமையும் நமக்கு மட்டுமே உண்டு என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். நாம் செல்லும் இடங்களிலெல்லாம் ஆர்ப்பரிக்கும் மக்கள் வெள்ளமே அதற்குச் சாட்சி.

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கும், நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதிக்கும் தகுதி வாய்ந்த வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கானப் பணிகளைத் துவங்கிவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் உங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

இந்தத் தேர்தலில் வென்று மக்களுக்கு நேர்மையாக சேவை செய்யமுடியும் எனும் நம்பிக்கை உடையவர்கள் பிப்ரவரி 21- ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். ஒருவரே எத்தனை தொகுதிகளுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். தகுதியான வேட்பாளரைப் பரிந்துரைத்தும் விருப்ப மனுக்களை அனுப்பலாம்.

இந்த முறை ஆன்லைனிலேயே (www.maiam.com) சுலபமாக விண்ணப்பிக்கும் வகையில் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்திய அரசியல் கட்சிகளிலேயே ப்ளாக்செயின் தொழில் நுட்பத்தியினைப் பயன்படுத்தி விருப்ப மனுக்களைப் பெறும் கட்சி எனும் பெருமையை அடைகிறோம். ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் தலைமை அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே கட்சியின் 4-ம் ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி பெரிய அளவில் மாநாடு நடத்த திட்டமிட்டனர். ஆனால் மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி மாநாடு நடத்த முடிவு செய்துள்ளனர்.

கட்சியின் தொடக்க விழாவை அரங்க நிகழ்ச்சியாக நடத்துகின்றனர். இன்று காலை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் என்ஜினீயரிங் கல்லூரி உள்அரங்கத்தில் கமல் தலைமையில் விழா நடைபெறுகிறது. விழாவில் மாநிலம் முழுவதிலும் இருந்து முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் பற்றி இன்றைய கூட்டத்தில் விவாதிக்கின்றனர். இன்று தொடக்க விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும் மாலையில் பத்திரிகையாளர்களை கமல் சந்திக்கிறார். அப்போது தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி? எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது? போன்ற முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com