மலேரியா தொற்று முற்றிலும் இல்லை

கடலூர் மாவட்டத்தில் மலேரியா உள்ளூர் தொற்று முற்றிலும் இல்லை என்று கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்
மலேரியா தொற்று முற்றிலும் இல்லை
Published on

கடலூர்

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மலேரியா நோய் தடுப்பு மற்றும் தொற்று நோய் தடுப்பு மாவட்ட ஒழுங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மலேரியா நோய் கண்டறிதல், நோய் கண்டவர்களுக்கு சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து கலெக்டர் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் மலேரியா உள்ளூர் தொற்று முற்றிலும் இல்லை. மாவட்டத்தில் காய்ச்சல் கண்ட நபர்களுக்கு மலேரியாவிற்கான ரத்த மாதிரி சேகரித்து அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஒரு சில நபர்கள் சென்னை, ஆந்திரா, மங்களூரு போன்ற வெளியிடங்களில் இருந்து மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

கொசு ஒழிப்பு பணி

தொடர்ந்து மழை காலங்களில் நீர் மற்றும் கொசுக்களால் பரவும் தொற்று நோயை கட்டுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக கொசு ஒழிப்பு பணியினை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக களப்பணியாளர்களின் பணியை கண்காணித்து பணி தொய்வின்றி நடை பெறுவதை கண்காணிக்க துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மேலும் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்திடவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதலை உறுதி செய்ய அனைத்து உள்ளாட்சி, மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து இந்திய மருத்துவ சங்கம், இந்திய குழந்தைகள் மருத்துவ சங்க உறுப்பினர்களிடம் தங்களது மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் விவரம் குறித்து சுகாதார துறைக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா, வட்டார மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், உள்ளாட்சி துறை அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com