சென்னை விமான நிலையத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மலேசிய விமானம் 2 மணிநேரம் தாமதம்

ஆக்சிஜன் அளவிற்கேற்ப 100 பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்ல முடிவு செய்யப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மலேசிய விமானம் 2 மணிநேரம் தாமதம்
Published on: 

மீனம்பாக்கம்,

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 10.35 மணிக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. பின்னர் நள்ளிரவு 11.55 மணிக்கு மீண்டும் 178 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் புறப்பட தயாரானது. பயணிகளை ஏற்றுவதற்கு முன் எந்திரங்களை சோதித்த விமானி, ஆக்சிஜன் டேங்கில் குறைந்த அளவே ஆக்சிஜன் இருப்பதை கண்டறிந்தார். 190 பேருக்கும் இது போதாது என்பதால் விமானத்தை இயக்க அவர் மறுப்பு தெரிவித்தார்.

2 மணி நேரம் தாமதம்

உயர் அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, ஆக்சிஜன் அளவிற்கேற்ப 100 பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்கு மீதமுள்ள 78 பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, மாற்று விமானங்களில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து சமாதானப்படுத்தினர். இதையடுத்து, 100 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் அந்த விமானம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் தாமதத்திற்குப் பின் அதிகாலை 2.20 மணிக்கு கோலாலம்பூர் புறப்பட்டுச் சென்றது.

மற்ற 78 பயணிகளும் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டு, நேற்று காலை ஏர் ஏசியா மற்றும் மலேசியன் ஏர்லைன்ஸ் மாற்று விமானங்கள் மூலம் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com