3 தூத்துக்குடி விசைப்படகுகளுக்கு ரூ.4.8 கோடி அபராதம்: மாலத்தீவு அரசு உத்தரவு

தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த 3 பேருக்கு சொந்தமான 3 விசைப்படகுகளில் கடந்த 1, 2, 3-ந் தேதிகளில் தருவைகுளத்தில் இருந்து மொத்தம் 25 மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு சென்றனர்.
விசைப்படகுகள் சிறைபிடிப்பு.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி மீனவர்கள் 25 பேர் மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், 3 விசைப்படகுகளுக்கு ரூ.4.8 கோடி அபராதம் விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

மீனவர்கள் சிறைபிடிப்பு

தூத்துக்குடி அருகே தருவைகுளத்தைச் சேர்ந்த சூசைபாக்கியம் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், மைக்கேல் ஜான்சங்கர் என்பவரது விசைப்படகில் 8 மீனவர்களும், ரமேஷ்குமார் என்பவரது விசைப்படகில் 9 மீனவர்களும் கடந்த 1, 2, 3-ந் தேதிகளில் தருவைகுளத்தில் இருந்து செவுள்வலை விசைப்படகில் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு சென்றனர். அவர்கள் கடந்த 12-ந்தேதி அதிகாலையில் மாலத்தீவில் இருந்து சுமார் 150 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த மாலத்தீவு கடற்படையினர் 3 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்தனர். தொடர்ந்து மாலத்தீவு எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி 3 படகுகளில் இருந்த 25 மீனவர்களையும் சிறைபிடித்தனர். அதன்பிறகு சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் 3 விசைப்படகுகளையும் கடந்த 14-ந்தேதி மாலத்தீவுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ரூ.4.8 கோடி அபராதம்

இந்த நிலையில் 3 விசைப்படகு உரிமையாளர்களுக்கும் இந்திய மதிப்பில் தலா சுமார் ரூ.1 கோடியே 60 லட்சத்து 24 ஆயிரம் அபராதம் விதித்து மாலத்தீவு மீன்பிடி, விவசாயம் மற்றும் கடல் வளங்கள் அமைச்சக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மொத்தம் ரூ.4 கோடியே 80 லட்சத்து 72 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த அபராத தொகையை 30 நாட்களுக்குள் செலுத்த வேண்டும், தவறும்பட்சத்தில் கோர்ட்டு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாலத்தீவில் தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com