கடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் ரசாயனம் கலந்த நீரால் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

கடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் ரசாயனம் கலந்த நீரால் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
கடல் காற்றால் ஏற்படும் பாதிப்பை தடுக்க மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் ரசாயனம் கலந்த நீரால் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்
Published on

சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரம் நகரம், சர்வதேச அளவில் தலைசிறந்த சுற்றுலா மையமாக திகழ்கிறது. இங்கு பல்லவ மன்னர்களின் கலைத்திறனால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது. மேலும் மாமல்லபுரம் என்றதும் அனைவருடைய நினைவுக்கும் வருவது அங்குள்ள புகழ்பெற்ற கடற்கரை கோவில் ஆகும்.

யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னமாக இந்த கடற்கரை கோவில் திகழ்கிறது. கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி ஏற்பட்டபோது ராட்சத அலை தாக்கியும் இந்த கோவிலுக்கு சிறு சேதாரம் கூட ஏற்படவில்லை. இந்த கோவிலை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரித்து வருகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு கோவிலின் 3 புறமும் கடல் உட்புகும் நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கோவிலை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் பாறாங்கற்கள் கொட்டப்பட்டு பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டது. அந்த கற்கள் கடல் உட்புகாமல் கோவிலை பாதுகாத்து வருகின்றன. கடற்கரையில் இந்த கோவில் அமைந்திருப்பதால் உப்பு காற்றால் கடுமையாக பாதிக்கப்படுகிறது. கடற்கரையில் பலத்த காற்று வீசுவதால் காற்றின் மூலம் உப்புத்துகள்கள் கோவில் முழுவதும் பரவி கோவிலை அரிக்கிறது. உப்பு அரித்த இடங்களில் சிறு சிறு துளைகள் ஏற்பட்டு மழை நீர் மற்றும் அசுத்தங்கள் சேர்ந்து பாதிப்பு அதிகரிக்கிறது. அதேபோல் காக்கை, குருவி எச்சங்கள் மூலமும் பாதிக்கப்படுகிறது.

இதை தவிர்க்க தொல்பொருள் ஆய்வுத்துறை ஆண்டுக்கு ஒருமுறை ரசாயன கலவை மூலம் உப்பு படிமங்களை அகற்றி வருகிறது. தொல்பொருள் ஆய்வுத்துறையின் வேதியியல் பிரிவு வல்லுனர்கள் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர். தற்போது முதல் கட்டமாக சுத்தமான நீரில் ரசாயன கலவை கலக்கப்பட்டு அந்த நீரால் உப்பு படிமங்கள் படிந்துள்ள கடற்கரை கோவில் சிற்பம் மீது பீய்ச்சி அடிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் கோவில் சிற்பங்களில் உள்ள உப்பு படிமங்களை அகற்ற காகித கூழுடன் சிலிகன் பாலிமர் ரசாயன கலவை கலந்து பூசப்பட உள்ளது.

உப்பு படிமங்கள் படிந்திருக்கும் தன்மையை பொறுத்து அதிகபட்சமாக 15 நாட்கள் வரை இந்த கலவை பூசப்பட்டு உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரசாயன கலவை கலந்த நீரால் இந்த கோவிலில் படிந்துள்ள உப்பு துகள்களை அகற்றும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com