மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட்: முதல் அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை

செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒருங்கிணைப்பு குழுவுடன் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சிறப்பு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மாமல்லபுரம,

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச"செஸ் ஒலிம்பியாட்" போட்டி வருகிற 28-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள "போர் பாயிண்ட்ஸ்" அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இதில் 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலைநிகழ்ச்சி, தங்கும்வசதி, உணவு, உபசரித்தல், போக்குவரத்து, பாதுகாப்பு, நிறைவுவிழா உள்ளிட்டவைகளை கவனிக்க தமிழக அரசு சார்பில் 18 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தீவிரமாக கண்காணித்து போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியில், தற்காலிகமாக 25 ஊழியர்களுடன் இயங்கி வரும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு அலுவலகம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அங்கு வீரர்களுக்கான விசா, பயணதிட்டம், விளையாட்டு வீரர்கள் எந்தெந்த நாட்டு வீரர்களுடன் போட்டி? நடுவர்கள் யார்? என்பது போன்ற முக்கிய அலுவலக பணிகள் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் தலைமை செயலர் வெ.இறையன்பு போட்டிக்கான அனைத்து ஏற்பாடு மற்றும் போட்டி நடைபெறும் பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது தாமதமாக நடக்கும் புதிய அரங்கம் அமைக்கும் பணிகளை வேகமாக செய்து முடிக்க அறிவுறுத்தி சென்றார்.

இந்த நிலையில் இன்று காலை 11.30 மணி அளவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் "செஸ் ஒலிம்பியாட்" போட்டிக்காக மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்ய வந்தார். அவர் போட்டி நடை பெறும் பூஞ்சேரி போர் பாய்ண்ட்ஸ் ரிசார்ட்க்கு சென்று அங்குள்ள வளாகத்தில் அமைக்கப்படும் புதிய அரங்கத்தை பார்வையிட்டார்.

மேலும் போட்டி நடைபெறும் இடங்களையும் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அங்குள்ள அரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒருங்கிணைப்பு குழுவுடன் மு.க. ஸ்டாலின் தலைமையில் சிறப்பு கலந்தாய்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மெய்ய நாதன், தா.மோ.அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு, உதயநிதி ஸ்டாலின், ஆ.ராசா எம்.பி போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com