மாமல்லபுரம் ஒரு உயிர் துடிப்பு மிக்க ஊர் -மோடி தமிழில் டுவிட்

மாமல்லபுரம் ஒரு உயிர் துடிப்பு மிக்க ஊர் என பிரதமர் மோடி தமிழில் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மாமல்லபுரம் ஒரு உயிர் துடிப்பு மிக்க ஊர் -மோடி தமிழில் டுவிட்
Published on

சென்னை,

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் வரலாற்று சிறப்பு மிக்க முதல் நாள் சந்திப்பு நிறைவடைந்தது. பின்னர் இரவு உணவுக்கு பின், இருவரும் ஓட்டலுக்கு திரும்பி உள்ளனர்.

முன்னதாக சந்திப்புக்கு பின் ஜின்பிங்கை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். ஜின்பிங் கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் இன்று இரவு தங்குகிறார். அவர் சென்றபின் பிரதமர் மோடி, கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு ஓய்வெடுக்கச் சென்றார். நாளை மீண்டும் இருவரும் சந்திக்க உள்ளனர்.

இந்நிலையில் மாமல்லபுரம் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில், மாமல்லபுரம், இந்தியாவின் பேரழகு வாய்ந்த இடங்களுள் ஒன்று. உயிர்த்துடிப்பு மிக்க ஊர். வாணிபம் மற்றும் ஆன்மிகத்துடன் தொடர்பு கொண்டிருந்த இடம். தற்போது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

யுனெஸ்கோவின் பாரம்பரியத் தலங்களுள் ஒன்றான இந்தக் கவின் மிகு இடத்தை, அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுற்றிப் பார்த்து, நேரத்தை செலவிடுவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

மாமல்லபுரத்தில் காணவேண்டிய பிரம்மாண்டமான இடங்களுள் ஒன்று அர்ஜூனன் தவம். இது மகாபாரதக்கால வாழ்க்கையை உயிர்ப்பித்துக் காட்டுகிறது. பல்லவர் காலத்துச் சிற்பக்கலையின் சிறப்பை, குறிப்பாக இயற்கையையும் விலங்குகளையும் அர்ஜூனன் தவம் காட்சிப்படுத்துகிறது.

அதிபர் ஷி ஜின்பிங்கும் நானும் அதி அற்புதமான ஐவர் ரதங்களைக் கண்டு களித்தோம். ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த ஐவர் ரதச் சிற்பங்கள்.

இந்த நினைவிடத்தில், தர்மராஜன் ரதம், பீமன் ரதம், அர்ஜூனன் ரதம், நகுலன்- சகாதேவன் ரதம் மற்றும் திரவுபதி ரதம் ஆகியவை உள்ளன.

வங்கக் கடலோரத்தில் அமைந்துள்ளது பிரமாண்டமான அலைவாய்க் கோவில். நமது அதி அற்புத அடையாளச் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த அலைவாய்க் கோவில், இந்தியக் கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை ஈடு இணையற்ற முறையில் வெளிப்படுத்துகிறது.

அலைவாய்க் கோவிலில் இருந்து மேலும் சில படங்கள் இதோ என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com