ஜனாதிபதியை மம்தா பானர்ஜி அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது - அன்புமணி

விமான நிலையத்தில் ஜனாதிபதியை அரசின் சார்பில் சிலிகுரி மேயர் மட்டும் தான் வரவேற்றதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை மம்தா பானர்ஜி அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது - அன்புமணி
Published on

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மேற்கு வங்கத்தில் சந்தாலி பழங்குடியின மக்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்ற ஜனாதிபதி திரவுபதி முர்முவை அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இரு வகைகளில் திட்டமிட்டு அவமதித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இந்தியாவின் முதல் குடிமகளை அரசியல் காரணங்களுக்காக மேற்கு வங்க முதல்-மந்திரி அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

எந்த மாநிலத்திற்கு குடியரசுத் தலைவர் சென்றாலும் அவரை அம்மாநில முதல்-மந்திரி அல்லது முதல்-மந்திரியால் வர முடியாத சூழலில் அம்மாநில அமைச்சர்கள் வரவேற்க வேண்டும் என்பது தான் புரோட்டாகால் ஆகும். ஆனால், பாக்தோக்ரா விமான நிலையத்தில் ஜனாதிபதியை அரசின் சார்பில் சிலிகுரி மேயர் மட்டும் தான் வரவேற்றுள்ளார்.

அதேபோல், ஜனாதிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்த சர்வதேச சந்தாலி பழங்குடியின மக்களின் மாநாடு கடைசி நேரத்தில் பிதாநகர் பகுதியிலிருந்து பாக்தோக்ரா விமான நிலையம் அருகேயுள்ள கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது. அங்கு சந்தாலி பழங்குடியினரால் வர முடியாது என்பதால் மாநாட்டிற்கு அதிகம் பேர் வரவில்லை, இரு நிகழ்ச்சிகளும் திட்டமிட்டு ஜனாதிபதியை அவமதிக்கும் நோக்குடன் நடந்துள்ளன.

ஜனாதிபதி அனைவருக்கும் பொதுவானவர். அதிலும் குறிப்பாக இந்திய வரலாற்றில் முதன்முறையாக பழங்குடியின சமூகத்திலிருந்து ஒரு பெண்மணி ஜனாதிபதியாக்கப்பட்டுள்ளார். அவரை அவமதிப்பது ஒட்டுமொத்த பெண் குலத்தையும், பழங்குடியினரையும் அவமதிக்கும் செயலாகும். முதல்-மந்திரி போன்ற உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com