குட்டை போல காட்சியளிக்கும் மாம்பழத்துறையாறு அணை

குமரி மாவட்டத்தில் 3 வாரங்களாக மழை பெய்யும் நிலையிலும் நீர்வரத்து இல்லாததால் மாம்பழத்துறையாறு அணை குட்டை போல காட்சி அளிக்கிறது.
குட்டை போல காட்சியளிக்கும் மாம்பழத்துறையாறு அணை
Published on

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் 3 வாரங்களாக மழை பெய்யும் நிலையிலும் நீர்வரத்து இல்லாததால் மாம்பழத்துறையாறு அணை குட்டை போல காட்சி அளிக்கிறது.

மழை

குமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரங்களாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை கைகொடுக்காத நிலையில் தற்போது மழை பெய்ய தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் மழையானது பெரும்பாலும் சாரல் மழையாகவே பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவி வந்தாலும் அணைகளுக்கும், குளங்களுக்கும் போதிய நீர்வரத்து இல்லை. பெரும்பாலான இடங்களிலும், அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளுக்கு எதிர்பார்த்த அளவு நீர்வரத்து இல்லை.

பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 612 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 150 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 581 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

குட்டை போல...

அதே சமயம் கடந்த 3 வாரங்களாக மழை பெய்தும் மாம்பழத்துறையாறு, சிற்றார்-1 மற்றும் சிற்றார்-2 அணைகளுக்கு இன்னும் நீர்வரத்து இல்லை. இந்த 3 அணைகளில் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்து இருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதன் காரணமாக தலா 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்-1 அணையில் 11.28 அடி தண்ணீரும், சிற்றார் 2 அணையில் 11.38 அடி தண்ணீரும் உள்ளது.

ஆனால் மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் மிகவும் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட அணையில் நேற்று காலையில் வெறும் 3.28 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் அந்த அணை குட்டை போல காட்சி அளிக்கிறது. எனவே பலத்த மழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

மழை அளவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அதிகபட்சமாக சுருளகோட்டில் 16.2 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. இதே போல பூதப்பாண்டி-1.2, களியல்-5.2, கன்னிமார்-3.4, கொட்டாரம்-14.4, குழித்துறை-2.2, மயிலாடி-8.2, நாகர்கோவில்-1.2, பெருஞ்சாணி-11.6, புத்தன்அணை-11.2, தக்கலை-7.1, மாம்பழத்துறையாறு-4, பாலமோ-12.6, ஆரல்வாய்மொழி-2, கோழிப்போர்விளை-2.5, அடையாமடை-2, ஆனைகிடங்கு-2.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com