திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல - ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக விடுதி அறையில் தங்குவது குற்றம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல - ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
Published on

சென்னை,

கோவை அவினாசி சாலையில், ஒரு கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்து அரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தங்கும் விடுதி ஒன்றை நடத்தியது. இந்த விடுதியில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவியது.

இதையடுத்து கடந்த ஜூன் 25-ந்தேதி கோவை (தெற்கு) தாசில்தார், பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது இந்த விடுதியில் தங்கியிருப்பவர்களின் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யும் பதிவேடு இல்லை. ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் சட்டவிரோதமாக ஒன்றாக தங்கியிருந்தனர். அங்கு மதுபாட்டில்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பதிவு செய்த அதிகாரிகள், அந்த விடுதிக்கு உடனடியாக சீல் வைத்து இழுத்து மூடினர்.

இதையடுத்து, சீலை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் அந்த விடுதியை நடத்தும் தனியார் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர் நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

சமூக வலைதளங்களில் பரவிய செய்திகளின் அடிப்படையில் மட்டுமே விடுதியில் சோதனை நடத்தி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சீல் வைப்பதற்கு முன்பு விளக்க நோட்டீஸ் கூட கொடுக்கவில்லை. அதிகாரிகளின் இந்த செயல் இயற்கை நியதிக்கு எதிரானது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதேநேரம், மனுதாரர் திருமணம் ஆகாத ஜோடிகளை விடுதி அறையில் தங்க வைப்பது ஒழுக்கக்கேடனாது என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால், அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

ஒரு அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் ஒன்றாக தங்க அனுமதித்தால் அது சட்டவிரோதமா? என்று இந்த ஐகோர்ட்டு எழுப்பிய கேள்விக்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீலிடம் பதில் இல்லை. ஒரே அறையில் திருமணம் ஆகாத ஆணும், பெண்ணும் தங்கக்கூடாது என்று சட்டமோ, விதிகளோ இல்லை.

அதுமட்டுமல்ல, திருமணம் செய்யாமலேயே ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்ந்து, குடும்பம் நடத்துவது சட்டப்படி குற்றம் இல்லை என்கிறபோது, ஒரு அறையில் ஒன்றாக தங்கினார்கள் என்பது எப்படி குற்றமாகும்?. எனவே, ஒரு அறையில் ஆணும், பெண்ணும் தங்கினார்கள் என்பதற்காக ஒரு விடுதிக்கு சீல் வைப்பது என்பது சட்டவிரோதமாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com