மதுரையில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர் கைது

மதுரையில் எம்.ஜி.ஆர். சிலையை சேதப்படுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை அவனியாபுரத்தில், திருப்பரங்குன்றம் சாலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு வாடிவாசல் அமைக்கும் இடத்தின் அருகே 2½ அடி உயரத்தில் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இந்த சிலையானது, 35 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இந்த சிலையை அ.தி.மு.க.வினர் பராமரித்து வந்தனர்.
சம்பவத்தன்று அந்த சிலையானது பீடத்தில் இருந்து பெயர்க்கப்பட்டு கீழே விழுந்து சற்று சேதம் அடைந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் சிலையை அ.தி.மு.க.வினர் சீரமைத்து அதே இடத்தில் நிறுவினர். சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் சிலை அருகே உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து அதன் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பாக அவனியாபுரம் அருணகிரிநாதர் கோவில் தெருவைச் சேர்ந்த ஜவகர் மகன் மணிமாறன் (வயது 31) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவரைப் பிடித்து போலீசார் விசாரித்தனர். சிலையை சேதப்படுத்திய சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரை கைது செய்தனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுவதால், அவர்களையும் தேடிவருவதாக போலீசார் தெரிவித்தனர்.






