மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்தவர் கைது

பணத்தை பெற்றுக்கொண்டு மருத்துவ சீட்டு வாங்கி தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார்.
கைது
Published on: 

ஆலந்தூர்,

மருத்துவ சீட்டு வாங்கித் தருவதாகக் கூறி ரூ.26 லட்சம் பெற்று, ரூ.24.80 லட்சம் மோசடி செய்த வள்ளியூரைச் சேர்ந்தவரை மடிப்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.

மருத்துவ சீட்டு

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் 37-வது தெருவைச் சேர்ந் தவர் அன்பரசன். இவரது அக்கா மகளுக்கு மருத்துவ சீட்டு வாங்க வேண்டும் என்பதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த அழகேந்திரன் என்பவரை அணுகினார். அதற்கு அழகேந்திரன், ரூ.26 லட்சம் கேட்டுள்ளார். உடனே அன்பரசன், அழகேந்திரனின் வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக ரூ.26 லட்சம் அனுப்பினார்.

ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டு மருத்துவ சீட்டு வாங்கி தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்தார். ஒரு கட்டத்துக்கு மேல் இதுகுறித்து அழகேந்திரனிடம் அன்பரசன் கேட்டபோது, ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மட்டும் திருப்பி வழங்கினார்.

கைது

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அன்பரசன், மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சத்து 80 ஆயிரம் மோசடி செய்ததாக அழகேந்திரனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

X