ஆன்லைன் மூலம் ரூ.1.42 லட்சம் பண மோசடி செய்தவர் கைது

தூத்துக்குடியில் சவுண்ட் சர்வீஸ் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு, முகநூலில் அறிமுகமாகிய ஒருவர், தன்னிடம் குறைந்த விலையில் ஆம்ப்ளிபையர், ஸ்பீக்கர்கள் விற்பனைக்கு இருப்பதாக கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சவுண்ட் சர்வீஸ் தொழில் செய்து வரும் ஒருவருக்கு முகநூல் மூலம் அறிமுகமாகிய மர்ம நபர் ஒருவர் தன்னிடம் குறைந்த விலையில் ஆம்ப்ளிபையர் மற்றும் ஸ்பீக்கர்கள் (Amplifier and Speaker) விற்பனைக்கு இருப்பதாக கூறியுள்ளார். அதை நம்பி மேற்சொன்ன நபர் UPI பண பரிவர்த்தனைகளின் மூலம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார். பின்னர் மேற்சொன்ன நபருக்கு சவுண்ட் சர்வீஸ் பொருட்கள் வராததையடுத்து தான் மோசடி செய்யப்பட்டது குறித்து NCRP-ல் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.
மேற்சொன்ன புகாரின் அடிப்படையில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை ஏ.டி.எஸ்.பி. (பொறுப்பு) தீபு மேற்பார்வையில், சைபர் குற்றப் பிரிவு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் திருப்பூர் காந்திநகரைச் சேர்ந்த கணேசன் மகன் சதீஷ்குமார் (வயது 35) என்பவர் மேற்சொன்ன பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் சதீஷ்குமாரை நேற்று முன்தினம் (30.12.2025) கைது செய்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






