கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்ற நபர் கைது

போதை காளான் மோகத்தில் வெளிமாநில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர்.
கொடைக்கானல்,
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் போதை காளான் மோகத்தில் வெளிமாநில இளைஞர்கள் கொடைக்கானலுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா வந்த இளைஞர்கள் சிலர் போதை காளான் உபயோகிப்பது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
இதனால் போதை காளான் விற்பனையை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சிறப்புக்குழு அமைத்து நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல்மலை கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையில் சந்தேகப்படும் வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
அவரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரை சோதனை செய்ததில், போதை காளான் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். அதில் அவர், கொடைக்கானல் கல்லுக்குழியை சேர்ந்த ஜெகநாதன் (வயது 45) என்பதும், சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர்.






