பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் கைது: சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கை

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை நடவடிக்கை
Published on

திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் விரைவு நடவடிக்கையால், பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் அண்மையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களைத் தடுப்பது மற்றும் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் சப்-இன்ஸ்பெக்டர் தனது செல்போன் எண்ணை மாணவிகளிடம் பகிர்ந்து, ஏதேனும் புகார் அல்லது பிரச்சினை ஏற்பட்டால் தயக்கமின்றி நேரடியாக தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.

பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் புகார்

இந்த நிலையில், அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி மாணவி ஒருவர், தங்கள் பகுதியில் வசித்து வரும் கண்ணன் (வயது 49) என்பவர் தொடர்ந்து தனக்கு பாலியல் ரீதியாக சீண்டல் செய்து வருவதாக சப்-இன்ஸ்பெக்டரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு தெரிவித்தார்.

விரைந்து கைது செய்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை

தகவல் கிடைத்த உடனேயே சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் விரைந்து களமிறங்கி விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்தனர். மேலும், குழந்தைகள் நல அலுவலர்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள், பெற்றோர் பாராட்டு

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட தொடர்பு எண் மூலம் மாணவி தைரியமாக புகார் அளித்ததையடுத்து, குறுகிய நேரத்திலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டிருப்பது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் செயல்திறனையும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் அதன் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் இந்த துரிதமான நடவடிக்கைக்கு அப்பகுதி பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணி தீவிரம்

தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் தொடர் ரோந்து, கண்காணிப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உடனடி கள நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com