

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்ற பெண் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், தனலட்சுமி அணிந்திருந்த 6 சவரன் தாலிச் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார். இதுகுறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
குற்றவாளியை பிடிக்க போலீஸ் டி.எஸ்.பி. உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் இருப்புப் பாதை உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று சந்தேகப்படும்படி நடமாடிய ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், கடம்பூர் கீழப்பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அழகுபாண்டி என்பது தெரியவந்தது. மேலும் அவர், தான் தனலட்சுமியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட 6 சவரன் தங்கச் சங்கிலியை போலீசார் மீட்டனர். கைது செய்யப்பட்ட அழகுபாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் தூத்துக்குடி பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.