பழனி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருட்டு; நபர் கைது

நூதன திருட்டில் ஈடுபட்ட நபரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
பழனி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருட்டு; நபர் கைது
Published on

பழனி,

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள தண்டாயுதபாணி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாகும். இந்நிலையில், பழனி முருகன் கோவிலில் வழக்கம்போல் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது, ஒரேயொரு உண்டியலில் மட்டும் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தன.

இதனால், கோவில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட உண்டியல் இருந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர். அதில், காகித அட்டையை உண்டியலில் பணம் விழவிடாமல் வைத்து, நூதன முறையில் பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.

இதுபற்றி விசாரித்ததில், ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் இந்த நூதன திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com