தூத்துக்குடியில் மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் மோசடி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கைது

தூத்துக்குடியைச் சேர்ந்த மூதாட்டியிடம் வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டு சிபிஐ அதிகாரிகள் என கூறி மர்ம நபர்கள் ரூ.50 லட்சம் மோசடி செய்தனர்.
தூத்துக்குடியில் மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் மோசடி: ஜார்கண்ட் மாநிலத்தில் ஒருவர் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு மர்ம நபர்கள் WhatsApp காலில் தொடர்பு கொண்டு தாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தி, அந்த மூதாட்டியிடம் உங்களது ஆதார் கார்டை பயன்படுத்தி மும்பையில் ஒரு வங்கி கணக்கு உள்ளதாகவும் அதில் மனித கடத்தல் வழக்கில் ரூ.2 கோடி பண பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் மனித கடத்தல் வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் பணத்தை மூதாட்டியிடம் நூதன முறையில் மோசடி செய்த வழக்கில் சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு ஏற்கெனவே 5 பேரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் மேற்சொன்ன மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த உதயகாந்த் ஜைஸ்வால் மகன் ரிது ராஜ் ஜைஸ்வால் (வயது 43) என்பவரை கடந்த 28.8.2025 அன்று ஜார்கண்ட் மாநிலம் சென்று கைது செய்து தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று (2.9.2025) சிறையில் அடைத்தனர்.

இதுபோன்று சிபிஜ, காவல்துறை அல்லது கஸ்டம்ஸ் அதிகாரிகள் என வாட்ஸ்அப்பில் வீடியோ, ஆடியோ கால் மூலம் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் மோசடி நடைபெற்றுவருகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை உடனடியாக துண்டித்துவிட வேண்டும். மேலும் சைபர் குற்ற புகார்களுக்கு உடனடியாக புகார் எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் அளித்து விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com