கன்னியாகுமரியில் 20 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது

கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் 20 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
Published on

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து மதுவிலக்கு டி.எஸ்.பி. ராஜா மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது, சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் மறைத்து வைத்திருந்த 20 கிலோ எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் நாகர்கோவில் காமராஜபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜோசப்ராஜ் என்பவரது மகன் ஜெரின்ஜோஸ் (வயது 37) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக கூடுதல் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தைத் தடுக்கக் கண்காணிப்புப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com