

கடலூர்,
உயிரோடு இருக்கிறாரா? எத்தனை பேரை காதலித்துள்ளார்? என தனது முன்னாள் காதலி குறித்து 1,886 கேள்விகள் எழுப்பிய வாலிபருக்கு மாநில தகவல் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்தது.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்.டி.ஐ.) 2005-ன் கீழ் அமைக்கப்பட்டுள்ள ஒரு சட்டப்பூர்வ மற்றும் தன்னாட்சி அமைப்பு ஆகும். பொதுத்தகவல்களை அலுவலர்கள் வழங்காதபோது அல்லது மறுக்கும்போது, பொதுமக்கள் தாக்கல் செய்யும் இரண்டாம் மேல்முறையீடுகள் மற்றும் புகார்களை விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிப்பது இதன் முக்கிய பணியாகும்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர், கடந்த 2021-2024 ஆண்டுகளில் அங்குள்ள கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. சந்தோசின் நடத்தை காரணமாக அந்த பெண் அவரிடமிருந்து விலகி சென்றார்.
இருப்பினும், செல்போன், கடிதம் மூலம் சந்தோஷ் தொந்தரவு செய்து வந்ததால், அந்த பெண் தற்கொலைக்கு முயற்சித்தார். இதற்கிடையே தன்னுடைய முன்னாள் காதலி தற்போது யாரை காதலிக்கிறார்? இதற்கு முன் எத்தனை பேரை காதலித்துள்ளார்? அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா? அவர் உயிரோடு இருக்கிறாரா? என்பன உள்ளிட்ட 1,886 கேள்விகளை எழுப்பி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள, பொது தகவல் அதிகாரிக்கு தகவல் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) கீழ் 97 விண்ணப்பங்களை சந்தோஷ் அனுப்பியுள்ளார்.
இந்த தகவல்களை வழங்கவில்லை என கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எதிராக சந்தோஷ், மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையர் இளம்பரிதி, தகவல் உரிமை சட்டத்தின் நோக்கத்தை சிதைக்கும் விதமாகவும், அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற பணிச்சுமையை ஏற்படுத்தும் வகையிலும், எந்தவொரு பொதுநலனும் இல்லாமல் செயல்பட்டுள்ளதாக இளைஞர் சந்தோசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், சந்தோஷ் கோரிய எந்த தகவல்களையும் வழங்க முடியாது எனவும், தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்ய அவருக்கு ஓராண்டு தடை விதித்தும் உத்தரவிட்ட மாநில தகவல் ஆணையம், சந்தோசுக்கு மனநல ஆலோசனை வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டார்.