ஓடும் ரெயிலில் வடமாநில இளைஞர்களை தாக்கிய விவகாரம் - விழுப்புரத்தைச் சேர்ந்த நபர் கைது

ஓடும் ரெயிலில் வட மாநில இளைஞர்களை தாக்கிய விழுப்புரத்தைச் சேர்ந்த நபரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
ஓடும் ரெயிலில் வடமாநில இளைஞர்களை தாக்கிய விவகாரம் - விழுப்புரத்தைச் சேர்ந்த நபர் கைது
Published on

சென்னை,

ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தமிழ் பேசும் நபர் ஒருவர், தகாத வார்த்தைகளைக் கூறி தாக்கிய வீடியோ ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த வீடியோவை ஆதாரமாகக் கொண்டு சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசார் ஆபாசமாக பேசுதல், சிறுகாயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் இந்த வீடியோ எப்போது, எந்த ரயிலில் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியாமல் இருந்து வந்தது.

எனவே வடமாநில இளைஞர்களை தாக்கிய நபரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது புகைப்படத்தை தமிழ்நாடு ரயில்வே காவல்துறை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. மேலும் இந்த நபர் பற்றிய விவரங்கள் தெரிந்தால், துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பொதுமக்களில் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டம் கானை கிராமத்தைச் சேர்ந்த மகிமைதாஸ்(38) என்பவரை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மகிமைதாஸ் கூலித் தொழிலாளி என்பதும் கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது.

இவர் சமீபத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் செய்யும்போது விருத்தாசலம் அருகே வடமாநில இளைஞர்களை தகாத வார்த்தையால் பேசி தாக்கியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இவர் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் மகிமைதாஸ் குறித்து துப்பு கொடுத்த நபருக்கு தக்க சன்மானம் தர இருப்பதாகவும் தமிழ்நாடு ரயில்வே காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com