குழந்தை இல்லை எனக்கூறி 2வது திருமணம்.. முதல் மனைவிக்கு செல்போனில் ‘தலாக்’ கூறிய நபர்.. அடுத்து நடந்த சம்பவம்


குழந்தை இல்லை எனக்கூறி 2வது திருமணம்.. முதல் மனைவிக்கு செல்போனில் ‘தலாக்’ கூறிய நபர்.. அடுத்து நடந்த சம்பவம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 18 Sept 2025 1:14 PM IST (Updated: 18 Sept 2025 1:26 PM IST)
t-max-icont-min-icon

குழந்தை இல்லை எனக்கூறி 2-வது திருமணம் செய்து கொண்டதுடன், முதல் மனைவிக்கு செல்போனில் அந்த நபர் ‘தலாக்’ கூறியதாக கூறப்படுகிறது.

பெங்களூரு,

பெங்களூரு சந்திரா லே-அவுட் அருகே ஒரு பெண் வசித்து வருகிறார். இவருக்கும், சாபஜ் அலி என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சாபஜ் அலி இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். அவருக்கு நகரில் 5 கடைகள் உள்ளன. இதற்கிடையில், சாபஜ் அலிக்கு குழந்தை இல்லை. ஆனால் தனக்கு குழந்தை இல்லாததற்கு மனைவி தான் காரணம் என்று கூறி அவர் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

மேலும் அவர் தனது மனைவியை இறைச்சிக்கடைக்கு அழைத்து சென்று, அங்குள்ள கழிவுகளை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், குழந்தை இல்லாததை காரணம் காட்டி கடந்த ஓராண்டுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை சாபஜ் அலி திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது முதல் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட சாபஜ் அலி, அவரை விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார். மேலும் செல்போனிலேயே 3 முறை ‘தலாக்’ கூறிவிட்டு, முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்துள்ளார்.

இதனை அந்த பெண் ஏற்கவில்லை. அத்துடன் இதுபற்றி முஸ்லிம் மத தலைவர்களிடம் அந்த பெண் புகார் தெரிவித்துள்ளார். அவர்களும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது பெண்ணின் உறவினர்களை சாபஜ் அலி தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் விவாகரத்து கொடுக்க அந்த பெண் மறுத்து விட்டார். இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி செல்போனில் தலாக் கூறி தன்னை விவாகரத்து செய்திருப்பதாக சாபஜ் அலி மீது அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story