

சென்னை,
சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த திருமணமான 35 வயது இளம்பெண் ஒருவர், ஓட்டேரி போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான், 2024-ம் ஆண்டு திருவள்ளூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தேன். என்னுடன் வேலை செய்த கோகுல்நாத் (26 வயது) என்பவருடன் நண்பராக பழகி வந்தேன். எங்கள் அலுவலகம் சம்பந்தமாக ஓட்டலில் விருந்து நடந்தபோது கோகுல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து என்னை ஆபாசமாக படம் பிடித்தார்.
பின்னர் அதை காட்டி மிரட்டி என்னை திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட வைத்தார். அதையும் எனக்கு தெரியாமல் செல்போனில் வீடியோவாக பதிவு செய்திருந்தார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான நான், அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி எனது செல்போன் எண்ணையும் மாற்றி விட்டேன். 2 வருடங்களுக்குப் பிறகு கோகுல்நாத் எனது செல்போன் எண்ணை கண்டுபிடித்து என்னை தொடர்பு கொண்டு மீண்டும் தனது ஆசைக்கு இணங்குமாறு மிரட்டி வருகிறார்.
தன்னுடன் உல்லாசமாக இருக்க மறுத்தால் இருவரும் சேர்ந்து இருக்கும் ஆபாச வீடியோவை, எனது கணவருக்கும், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.