

திருவள்ளூர்,
பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அஜ்மல்(வயது 42). இவர் கடந்த 2013-ம் ஆண்டு, மராட்டிய மாநிலம் வசாய் மாவட்டத்தில் வசித்து வந்த தனது மாமியார் சஞ்சிதாவை, குடும்ப தகராறு காரணமாக கொலை செய்துள்ளார்.
கொலையை செய்துவிட்டு கொல்கத்தாவிற்கு தப்பியோடிய அஜ்மல், அங்குள்ள தனது சகோதரியின் வீட்டில் 5 நாட்கள் தங்கியிருந்தார். பின்னர் அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த அவர், கட்டிட தொழிலாளியாக வேலை செய்யத் தொடங்கினார். இதன் பிறகு அவர் தனது சொந்த ஊருக்கு செல்லாமல் தமிழ்நாட்டிலேயே தங்கிவிட்டார்.
இந்நிலையில் வசாய் மாவட்ட போலீசார், தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் இருக்கும் வழக்குகள் குறித்து சமீபத்தில் விசாரிக்க தொடங்கினர். அப்போது சஞ்சிதா கொலை வழக்கு பல வருடங்களாக முடிக்கப்படாமல் இருப்பதை அறிந்த போலீசார், தலைமறைவான முகமது அஜ்மலை தேடத் தொடங்கினர்.
பீகாரில் உள்ள அஜ்மலின் சொந்த ஊருக்கு சென்று விசாரித்தபோது, அவர் அங்கு வரவே இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் பல்வேறு ஆதாரங்களை திரட்டி தீவிர விசாரணை நடத்தியபோது, முகமது அஜ்மல் தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் தங்கியிருந்த அஜ்மலை தேடிப் பிடித்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தனது மாமியார கொன்ற வழக்கில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு முகமது அஜ்மல் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது குழந்தையை பார்க்க விடாமல் மனைவியும், மாமியாரும் தடுத்தனர் என்றும், அப்போது ஏற்பட்ட தகராறில் தனது மாமியார் சஞ்சிதா படுகாயமடைந்து உயிரிழந்துவிட்டார் என்றும் அஜ்மல் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.