கள்ளக்காதலை எதிர்த்தவர் கத்தியால் குத்தி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கன்னியாகுமரியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக, தனது வீட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து வந்துள்ளார்.
கள்ளக்காதலை எதிர்த்தவர் கத்தியால் குத்தி கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிரக்கோடு குன்னம்பாறை பகுதியைச் சேர்ந்த அனிசன் (வயது 29), வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த திலகா என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 31.8.2012 அன்று, 3 குழந்தைகளுக்குத் தாயான அந்தப் பெண்ணை அனிசன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

இதனை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மற்றும் கிராம மக்கள் எதிர்த்துள்ளனர். இதனால் சுரேஷ் மீது அனிசன் ஆத்திரத்தில் இருந்துள்ளார். சம்பவத்தன்று மதியம், சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் அனிசனிடம் இதுகுறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், சுரேஷின் தந்தை அவரை வீட்டிற்குச் செல்லுமாறு கூறியுள்ளார். சுரேஷ் ரப்பர் தோட்டம் வழியாக தனது வீட்டிற்கு நடந்து சென்றபோது, அவரைப் பின் தொடர்ந்து சென்ற அனிசன், மறைத்து வைத்திருந்த கத்தியால் சுரேஷின் விலா பகுதியில் குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சுரேஷ், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தக் கொலை வழக்கு தொடர்பாக தக்கலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு பத்மநாபபுரம் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி பரமசிவதாஸ் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜெகதேவ் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பரமசிவதாஸ் இன்று தீர்ப்பளித்தார். அதில், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம், ஆபாசமாக பேசுதல்- ஒரு மாத சிறை மற்றும் ரூ.1,000 அபராதம், வழிமறித்தல்- ஒரு மாத சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், உயிரிழந்த சுரேஷின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சாட்சிகளை விரைவாக ஆஜர்படுத்தி, வழக்குகளை முடிக்க மாவட்ட எஸ்.பி. எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இதே நீதிமன்றத்தில் 2 கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com