

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மூங்கம்பட்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(வயது 43). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். சரவணன் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது தொடர்பான விசாரணைக்காக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார்.
அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு புறப்பட்டுச் சென்ற சரவணன், வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் நேற்று போச்சம்பள்ளி அடுத்த மாதம்பதி சிலம்பம் காட்டில் தூக்கிட்ட நிலையில் சரவணன் சடலமாக மீட்கப்பட்டார். சரவணனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.