

மதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்தவர், ஆகாஷ் (வயது 24). அப்பகுதியில் 2 பேரை வெட்டிய வழக்கில் ஆகாசை போலீசார் கைது செய்து தாக்கியதில் அவரது கால் எலும்பு முறிந்தது. இதற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனையானது மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி நடந்தது. இச்சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை கைது செய்தால்தான் உடலை பெற்றுக்கொள் வோம் என ஆகாஷ் உறவினர்கள் கூறுகிறார்கள்.
இதன் காரணமாக அவரது உடலானது, மதுரை அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார், கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆகாஷ் குடும்பத்தினரிடம், பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர். அதாவது, அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஆகாஷ் எங்கு வைத்து கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் நடந்தது என்னென்ன, ஆகாசை போலீசார் எங்கெல்லாம் விசாரணைக்கு அழைத்துச்சென்றார்கள், எங்கு வைத்து தாக்கினார்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற்றுக்கொண்டனர்.
இந்தநிலையில், சம்பவத்தின்போது பணியில் இருந்த மற்றும் தொடர்புடைய மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர்கள் திலீபன், குமாரவேல்பாண்டியன் உள்ளிட்ட 11 போலீசாரை, சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துள்ளனர். அதன்படி அவர்களுக்கு சிவகங்கை போலீஸ் சூப்பிரண்டு மூலமாக தனித்தனியாக சம்மனும் அனுப்பி உள்ளதாகவும், அவர்கள் இன்று முதல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களிடம், ஆகாஷ் கைது செய்யப்பட்டது முதல் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள் குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும், ஆகாஷ் பாலத்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றதாக கூறியது ஏன்? பிரேத பரிசோதனை அறிக்கை தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.