மானாமதுரை ஆகாஷ் கொலை வழக்கு: 6 போலீசாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

மானாமதுரை ஆகாஷ் கொலை வழக்கை சிவகங்கை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி மதுரை மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மானாமதுரை ஆகாஷ் கொலை வழக்கு
Published on

மதுரை,

மானாமதுரை ஆகாஷ் வழக்கில் 6 போலீசாருக்கு எதிராக இ-பைலிங் முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மதுரை அரசு ஆஸ்பத்திரி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் என்பவரின் மகன் ஆகாஷ் (வயது 27). இவரை போலீசார் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவரை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதற்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அவர் மார்ச் மாதம் 8-ந்தேதி இறந்தார்.

மதுரை ஐகோர்ட்டு

அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து மானாமதுரையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆகாஷ் இறந்த வழக்கில் எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அது மட்டுமல்லாமல் கொலை வழக்காக மாற்றப்பட்டு, 6 போலீஸ்காரர்கள் குற்றம் சாட்டப்பட்ட நபர்களாக சேர்க்கப்பட்டனர்.

ஆனால் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆகாஷ் உடலை உறவினர்கள் 100 நாட்களாக பெறாமல் இருந்தனர். இந்த விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டு தலையிட்டு ஆகாஷ் உடலை மதுரை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அடக்கம் செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் சில நாட்களுக்கு முன்பு ஆகாஷ் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சிவகங்கைக்கு மாற்றம்

இந்தநிலையில் ஆகாஷ் இறந்த வழக்கு மதுரை மாவட்ட தீண்டாமை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. அந்த கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒரு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ஆகாஷ் இறந்தது தொடர்பான சம்பவங்கள் சிவகங்கை மாவட்டத்தில் நடந்து இருக்கின்றன. எனவே அவரது இறப்பு வழக்கை சிவகங்கை மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடத்துவதுதான் சரியானது.

இந்த வழக்கை சிவகங்கை மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி ஜோசப் ஜாய் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆகாஷ் இறப்பு வழக்கை சிவகங்கை கோர்ட்டுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வரும் போது 6 போலீஸ்காரர்கள் மீதும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இதற்கிடையே ஆகாஷ் கொலை வழக்கில் 6 போலீசாருக்கு எதிராக இ-பைலிங் முறையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com