

தூத்துக்குடி,
மணப்பாடு கடற்கரையில் உயிருடன் ஒதுங்கிய சாளை மீன்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே மணப்பாட்டில் ஏராளமான நாட்டுப்படகு மீனவர்கள் உள்ளனர். இவர்கள் பிடித்து வரும் சாளை மீன்கள் ருசி மிகுந்து காணப்படுவதால் ஏராளமான வியாபாரிகள் போட்டிப் போட்டு வாங்கி செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் மணப்பாடு மணல் குன்றில் சவேரியார் வாழ்ந்த குகை முதல் வடபுற கடலோரத்தில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு சாளை மீன்கள் உயிருடன் கூட்டமாக கரை ஒதுங்கின.
ஆயிரக்கணக்கான மீன்கள் உயிருடன் கரை ஒதுங்கியதைப் பார்த்த மீனவர்கள் அங்கு நாட்டுப்படகில் சென்று கூடைகளில் மீன்களை அள்ளினர். கடற்கரைக்கு சுற்றுலா வந்த பயணிகளும், பொதுமக்களும் பிளாஸ்டிக் பைகளில் சாளை மீன்களை ஆர்வமுடன் அள்ளிச் சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "மணப்பாடு பகுதியில் கடல் நீரோட்டம் காரணமாக மணல் திட்டுகள் அதிகளவில் உருவாகிறது. கடலில் கூட்டமாக சென்ற சாளை மீன்கள் நீரோட்டம் காரணமாக கரைக்கு ஒதுங்கி இருக்கலாம். மணப்பாடு பகுதியில் நிலவும் கடல் நீரோட்ட மாற்றம் குறித்து மாவட்ட நிர்வாகம், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.