மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை வெளியேற்றக் கூடாது என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது - மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவு
Published on

மதுரை,

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து போன்ற இடங்களில் தனியார் நிறுவனம் சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்களை 99 ஆண்டுகள் குத்தகைக்கு பெற்று தேயிலை தோட்டங்களை நடத்தி வருகிறது. அங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தங்கியிருந்து பணிபுரிகின்றனர்.

தனியார் நிறுவனத்தின் குத்தகை காலம் வரும் 2028-ம் ஆண்டுடன் நிறைவடையும் நிலையில், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் நிவாரண தொகையுடன் கூடிய விருப்ப ஓய்வு பெறலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பலர் விருப்ப ஓய்வுக்காக விண்ணப்பித்தனர்.

இந்த நிலையில், மாஞ்சோலையைச் சேர்ந்த அமுதா என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் குத்தகை காலம் முடிவதற்கு முன்பாகவே தங்களை வெளியேறச் சொல்வதாகவும், 4 தலைமுறைகளாக அதே பகுதியில் வசித்து வரும் சூழலில், தற்போது வெளியேறச் சொல்வதால் செய்வதறியாது தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு போன்றவற்றை செய்து தர உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளை செய்து தரும் வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நாளை மறுநாள் உரிய விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com