கடைகளில் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம்: தமிழக அரசு சட்டத்திருத்தம் தாக்கல்

கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் என்று சட்டசபையில் சட்டத் திருத்த முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அளித்துள்ள விளக்கத்தில், மாநிலத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் அவர்களது வேலை நேரம் முழுவதுமாக நிற்க வைக்கப்படுகின்றனர். அதன் விளைவாக பல வகையான உடல்நலக் கேடுகளுக்கு ஆளாகின்றனர்.

தங்களது வேலை நேரம் முழுவதும் தங்கள் பாதங்களிலேயே நிற்கும் வேலையாட்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து வேலை ஆட்களுக்கும் இருக்கை வசதி வழங்குதல் அவசியம் என கருதுகிறது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற மாநில தொழிலாளர் ஆலோசனை குழுவின் கூட்டத்தில் வேலையாட்களுக்கு இருக்கை வசதி வழங்கும் பொருட் கூறானது முன்வைக்கப்பட்டது. அது குழுவின் உறுப்பினர்களால் ஒத்தக் கருத்துடன் ஏற்கப்பட்டது.

எனவே அரசானது மேற்சொன்ன நோக்கத்திற்காக 1947ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தினை தக்கவாறு திருத்தம் செய்வதென முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிமானது மேற்சொன்ன முடிவிற்கு செயல்வடிவம் கொடுக்க விழைகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com