மங்களூரு வங்கி கொள்ளை வழக்கு - நெல்லையில் 18 கிலோ நகைகள் மீட்பு

மங்களூரு வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
நெல்லை,
கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் கடந்த 17-ந்தேதி முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் வங்கி ஊழியர்களை மிரட்டி பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து மங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கேரள மாநிலம் வழியாக தமிழகத்தின் நெல்லை மாவட்டத்திற்குள் நுழைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்படி மங்களூரு காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார், நெல்லை மாவட்டம் அம்பையில் முருகாண்டி, ஜோஸ்வா ஆகிய 2 நபர்களை கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் அம்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இந்த நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், நெல்லை மாவட்டம் பத்மநேரியில் உள்ள முருகாண்டியின் வீட்டில் தனிப்படை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி சுமார் 18 கிலோ தங்க நகைகளை மீட்டுள்ளனர். தொடர்ந்து முருகாண்டிக்கு தொடர்புடைய இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு மங்களூருவிற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.






