கிருஷ்ணகிரியில் ஜூலை முதல் வாரத்தில் மாங்கனி கண்காட்சி

மாங்கனி கண்காட்சி 26 நாட்கள் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரியில் ஜூலை முதல் வாரத்தில் மாங்கனி கண்காட்சி
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் ஆண்டுதோறும் அகில இந்திய அளவிலான மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 32-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி வளாகத்தில், ஜூலை மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அனிதா, எம்.எல்.ஏ.க்கள் முகுந்தன் (கிருஷ்ணகிரி). இளையராஜா (ஊத்தங்கரை). கோவிந்தராஜன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் தினேஷ்குமார் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிருஷ்ணகிரியில் இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் 32-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்குகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தொழில்துறை அமைச்சருமான கீர்த்தனா, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளனர்.

போக்குவரத்து வசதி

இக்கண்காட்சியில் மா கண்காட்சி அரங்கம், மலர் கண்காட்சி அரங்கம், 50 அரசுத்துறை அரங்குகள், 80 தனியார் அரங்குகள், குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், இரண்டு, நான்கு சக்கர வாகன நிறுத்தங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் போன்ற கட்டமைப்புகள் அமைக்கப்பட உள்ளது. அரங்குகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த மாங்கனி கண்காட்சி 26 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் கிருஷ்ணகிரி நகரிலிருந்து இக்கண்காட்சியை காணும் வகையில் பொது மக்களுக்கு அரசு சிறப்பு பஸ் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை புதிய பஸ் நிலையம், பழையபேட்டை டவுன் பஸ் நிலையம். ரவுண்டாணா 5 ரோடு. குப்பம் சாலை மற்றும் சேலம் மேம்பாலம், ராயக் கோட்டை மேம்பால சந்திப்புகள் வழியாக இயக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குனர் உமா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆஞ்சலின் பொன்ராணி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமசந்திரன் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com