மாணிக்கம்தாகூர் எம்.பி. ஏற்பாட்டில் விமான நிலையத்தை சுற்றிப்பார்த்த அரசு பள்ளி மாணவர்கள்

மாணிக்கம்தாகூர் எம்.பி. ஏற்பாட்டில் மதுரை விமான நிலையத்திற்கு ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் சென்று சுற்றிப்பார்த்தனர்.
மாணிக்கம்தாகூர் எம்.பி. ஏற்பாட்டில் விமான நிலையத்தை சுற்றிப்பார்த்த அரசு பள்ளி மாணவர்கள்
Published on

திருப்பரங்குன்றம்

மாணிக்கம்தாகூர் எம்.பி. ஏற்பாட்டில் மதுரை விமான நிலையத்திற்கு ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் சென்று சுற்றிப்பார்த்தனர்.

விமான நிலையம்

திருப்பரங்குன்றம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட சூரக்குளம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் கடந்த 25-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். சூரக்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கலந்து கொண்டு மாணவர்களோடு கலந்துரையாடினார்.அப்போது அவர் சில மாணவர்களிடம் வருங்காலத்தில் நீங்கள் என்னவாக வர வேண்டும். எந்த வேலை செய்ய விரும்புகிறீர்கள்? என்று கேள்வி கேட்டார்.

அதற்கு மாணவர்கள் டாக்டராக, என்ஜினீயராக, போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்றனர். சில மாணவர்கள் பைலட்டாக வர ஆசைப்படுகிறோம். என்றனர். உடனே அவர்களிடம் விமான நிலையத்திற்கு சென்று இருக்கிறீர்களா? என்றுகேட்டார். அதற்கு மாணவர்கள் ஒருவர் கூட விமான நிலையத்திற்கு சென்றது இல்லை என்றனர். சூரக்குளத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள மதுரை விமான நிலையத்தை பார்த்தது இல்லையா? விமான நிலையத்திற்கு சென்றுவந்தது இல்லையா? என்றதை கேட்டு வியந்தார்.

மாணிக்கம்தாகூர் எம்.பி. ஏற்பாடு

பிறகு அவர் பள்ளிதலைமை ஆசிரியர் ரமேஷ்பாபுவிடம் மாணவர்கள் விமான நிலையத்திற்கு வந்து செல்ல அனுமதி கேட்டு கடிதம் எழுதுங்கள். அதற்கான ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். அதன்படி விமான நிலைய உயர் அதிகாரிக்கு தலைமை ஆசிரியர் கடிதம் எழுதினார். மாணிக்கம் தாகூர் எம்.பி. அனுமதி பெற்று தந்தார். அதன் அடிப்படையில் நேற்று மாணிக்கம் தாகூர் எம்.பி. ஏற்பாட்டில் 3 வேன்களில் தலைமையாசிரியர் ரமேஷ்பாபு தலைமையில்ஆசிரியர், ஆசிரியைகள் உள்பட 175 மாணவ-மாணவிகள் மதுரை விமான நிலையத்திற்கு சென்றனர்.

பார்த்து ரசித்தனர்

அவர்கள் விமான நிலைய முனைய அலுவலக மாடியில் இருந்து விமானங்கள் தரையில் இறங்குவதையும், விமான நிலையத்திலிருந்து விமானங்கள் ஏறி உயர்ந்து பறந்து செல்வதையும் கண்டு வியந்து பார்த்து ரசித்தனர். இந்தநிலையில் மாணவ-மாணவிகளுக்கு மாணிக்கம்தாகூர் எம்.பி. ஏற்பாட்டில் குளிர்பானம் மற்றும் பிஸ்கட்கள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து மாணவர்கள் கூறும்போது, நாங்கள் வானத்தில் விமானம் பறந்து செல்வதை கண்ணால் பார்த்திருக்கிறோம். ஆனால் மாணிக்கம் தாகூர் எம்.பி. ஏற்பாட்டில் முதல்முறையாக விமான நிலையத்திற்குள் சென்று விமானங்கள் ஏறி இறங்குவதை பார்த்தோம். அது சுற்றுலா தளத்திற்கு சென்று வந்தது போல மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com