“பணம் பறிக்கும் முயற்சி என மணிகண்டன் சொல்வது பொய்” - நடிகை சாந்தினி ஐகோர்ட்டில் மனு

திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுடன் சேர்ந்து வாழ சம்மதித்ததாக நடிகை சாந்தினி கூறியுள்ளார்.
“பணம் பறிக்கும் முயற்சி என மணிகண்டன் சொல்வது பொய்” - நடிகை சாந்தினி ஐகோர்ட்டில் மனு
Published on

சென்னை,

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, நடிகை சாந்தினி என்பவர் அளித்த புகார் மனுவில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்வதாக சொன்னதாகவும், 5 வருடங்களாக இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் 3 முறை தான் கர்ப்பம் அடைந்ததாகவும், மணிகண்டனின் மிரட்டல் காரணமாக கருவை கலைத்ததாகவும் சாந்தினி தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாக சாந்தினி புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் மீது கொலை மிரட்டல், திருமணம் செய்வதாக ஏமாற்றுதல் போன்ற 6 சட்டப்பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பாலியல் வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் நடிகை சாந்தினி பணம் பறிக்கும் நோக்கத்தில் தன் மீது புகார் அளித்துள்ளதாகவும், அவர் மலேசியாவில் இதுபோல் மோசடி செய்ததாகவும், மருத்துவ உதவிக்காக தான் கொடுத்த ரூ.5 லட்சத்தை திருப்பி கேட்டதால் தன்னை மிரட்டுவதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகை சாந்தினியுடன் கணவன்-மனைவியாக வாழவில்லை என்றும், கொடுத்த கடனை திரும்பக் கேட்டதால் இவ்வாறு அவர் பொய் புகார் கொடுத்துள்ளார் என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நேற்று சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் அமைச்சர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை சாந்தினி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் பணம் பறிப்பதற்காகவே புகாரை கொடுத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கூறும் குற்றச்சாட்டு பொய் என்றும் திருமணம் செய்து கொள்வதாக அவர் கூறியதால் சேர்ந்து வாழ சம்மதித்ததாகவும் சாந்தினி தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com