

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல், நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் காரணமாக, தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அந்த வகையில் கடலூர் மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வானிலை கணிப்புகளின் அடிப்படையில் புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகமும் முழுஅளவில் தயார் நிலையில் இருந்தது.
தேசிய பேரிடர் மீட்பு படையினர் 28 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 40 பேரும் சென்னையில் இருந்து வந்து கடலூரில் முகாமிட்டனர். இதுதவிர கடலூர் மாவட்ட போலீசாருடன் இணைந்து 240-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் மீட்பு உபகரணங்களுடன் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்தனர்.
மேலும் மக்களை தங்க வைப்பதற்காக 40 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்பட 223 தங்கும் இடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இரவில் கொட்டிய மழை
ஆனால், மாண்டஸ் புயல் கடலூர் மாவட்டத்தை எந்தவகையிலும் தொந்தரவு செய்யாமல், அமைதியாக கரையை கடந்து சென்றுவிட்டது. ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை என்பது மிக கனமழை என்பதை உணர்த்துவதாகும். ஆனால் அத்தகைய அளவில் மழை பொழிவு என்பது மாவட்டத்தில் பதிவாகவில்லை. நேற்று முன்தினம் காலை முதல் சாரல் மழையோடு, கடும் குளிர்தான் நீடித்தது.
நடுங்க வைத்த இந்த குளிர் நீடித்த நிலையில் மாண்டஸ் புயல் மால்லபுரத்தில் இரவு 10 மணிக்கு மேல் கரையை கடக்க தொடங்கியது. அந்த நேரத்தில் கடலூர் நகரில் மழை பொழிவு இருந்தது. அப்போது பலத்த காற்றுடன், மழை கொட்டியது. இதனால் நகரில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இந்த மழையும் சிறிது நேரம் தான் நீடித்தது.
கடல் சீற்றத்தால் மரங்கள் சாய்ந்தன
மழை, காற்றின் வேகம் குறைந்து காணப்பட்டு இருந்தாலும், கடல் நேற்று முன்தினம் காலை முதல் இருந்தே ஆக்ரோஷமாக தான் காணப்பட்டது. புயல் கரையை கடந்த சமயத்தில் அலையின் சீற்றம் அதிகமாக இருந்தது.
சுமார் 14 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து வந்ததால், கடல் ஒருவித கொந்தளிப்புடனே இருந்தது. இதனால் பல இடங்களில் கடற்கரையோரம் மண் அரிப்புகள் ஏற்பட்டது.
இதில், கடலூர் அடுத்த சுபஉப்பலவாடி கடற்கரையில் மண் அரிப்புகள் ஏற்பட்டது. கரையோர பகுதியில் நடப்பட்டு இருந்த பனை மரங்கள் மற்றும் சவுக்கு மரங்கள் சில மண் அரிப்பால் கீழே விழுந்தன. அதேபோல், சுப உப்பலவாடியில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலையும் அடித்து செல்லப்பட்டது.
இதேபோல் மாவட்டத்தில் கடற்கரையோரம் உள்ள பல்வேறு கிராமங்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
மேலும், பெரிய கங்கணாங்குப்பத்தில் சென்னை-கடலூர் சாலையில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் போலீசார் உடனடியாக சென்று சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
அதேபோல், பண்ருட்டி அடுத்த நடு மேட்டுக் குப்பத்தில் வேப்ப மரம் ஒன்று, அந்த பகுதியில் அய்யப்ப பக்தர்கள் அமைத்திருந்த பந்தல் மீது சாய்ந்து விழுந்தது. மரம் விழுந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
அமைதியான கடல்
மாண்டஸ் புயல் கடலூர் மாவட்டத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாவிட்டாலும், கடற்கரையோர பகுதியில் சில பாதிப்புகளை மட்டும் கடல் சீற்றம் ஏற்படுத்தி சென்று இருக்கிறது.
புயல் கரையை கடந்த நிலையில் நேற்று காலை கடலூரில் அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. மதியத்துக்கு பின்னர் வெயில் தலைகாட்டியது. சிறிது நேரம் நீடித்த இந்த லேசான வெயிலுக்கு பின் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த சீதோஷன நிலை நீடித்தது.
அதேவேளையில் கடந்த 2 நாட்களாக சீற்றத்துடன் காணப்பட்ட கடல், நேற்று ஆக்ரோஷம் குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியது. இதனால், மக்களும் கடற்கரைக்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
மழை அளவு
நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 37 மில்லி மீட்டரும், அதற்கு அடுத்தபடியாக பண்ருட்டியில் 36 மி.மீ. மழையும் பதிவானது. குறைந்தபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 2 மி.மீ. மழை பெய்துள்ளது.
அதேபோல் கடற்கரையையொட்டி பகுதிகளான கடலூரில் 22.2 மி.மீ., பரங்கிப்பேட்டையில் 23.6 மி.மீ., சிதம்பரம் 9.4 மி.மீ., அண்ணாமலை நகர் 12 மி.மீ. மழை என்கிற நிலையில் பதிவானது. வேப்பூர் அருகே உள்ள லக்கூரில் மழை ஏதும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடதக்கதாகும்.