விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலர் பலி - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

இவ்விபத்திற்கு காரணமான துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலர் பலி -  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
Published on

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் செயல்பட்டுவந்த பட்டாசு ஆலையில், நேற்று (19.04.2026) ஏற்பட்ட விபத்தில் 23 தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

இந்த கோரமான விபத்தில் பலியானவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலியை செலுத்துகிறது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய விழைகிறது.

விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்குவதோடு, காயமடைந்தோருக்கு தரமான உயர் சிகிச்சைகள் வழங்கிட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இது ஒரு சாதாரண விபத்து அல்ல. வெடிபொருள் விதிகள் 2008 மற்றும் தொழிற்சாலைகள் சட்டம் 1948 ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான தொழிலாளர்கள் ஒரே உற்பத்தி பகுதியில் பணியமர்த்தப்பட்டிருந்தது நேரடியான சட்டமீறல் ஆகும். மேலும் பாதுகாப்பற்ற பணிச்சூழல், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் புறக்கணிப்பு போன்றவை லாபத்தை முன்நிறுத்தி மனித உயிர்களை மலினமாக்கி இருப்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

பட்டாசு ஆலையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளும், கவனக்குறைவும் தொடர்ந்து நிலவி வருகிறது. இது அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை வெளிப்படுத்துகிறது. இவ்விபத்திற்கு காரணமான துறை அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது குறித்து முழுமையான, நேர்மையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது போன்ற விபத்துகள் எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுத்திட உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மாநில அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com