

எம்.எல்.ஏவாக பதவி ஏற்றபின் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலா தலைமையில் இருக்கும் இயக்கமே உண்மையான இயக்கம் என மக்கள் தீர்ப்பு அளித்து இருக்கிறார்கள். தமிழக மக்களின் விருப்பத்தை ஆர்.கே.நகர் மக்கள் நிறைவேற்றி உள்ளனர். தற்போதைய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவே ஆர்.கே.நகர் மக்கள் வாக்களித்தனர். அ.தி.மு.கவுக்கு ரத்தமும் சதையுமாக இருக்கும் தொண்டர்கள் எங்களுடன் இருக்கிறார்கள். மனதளவில் பல அமைச்சர்களும், எம்.எல் ஏக்களும் எங்கள் பக்கம் உள்ளனர். சின்னமும், கட்சியும் இருந்தால் போதாது, மக்கள் ஆதரவு தேவை
ஆட்சியாளர்கள் வருங்காலத்திலாவது நல்ல பெயரை எடுக்க வேண்டும்.
துரோக வரலாற்றில் துரோகத்திற்கு வெற்றி இல்லை. பதவியில் இருக்க வேண்டும் என்ற 5 பேரின் சுய நலத்திற்கு விலை போய்விட வேண்டாம்.
5 அல்லது 6 பேரின் சுயநலமே இவ்வளவு பிரச்சினைக்கு காரணம்; சிலர் வழிவிட்டால் ஆட்சியை தக்க வைக்க முடியும்.
தோல்விக்கு பின் பதட்டத்தில் நாம் என்ன செய்கிறோம் என தெரியாமல் ஓபிஎஸ்-ஈபிஎஸ் முடிவு எடுக்கிறார்கள். வருங்காலத்திலாவது ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணியில் இருப்பவர்கள் நல்ல முடிவு எடுக்கவேண்டும். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள், மற்றவர்களை கட்சியில் இருந்து நீக்கி வருகிறார்கள். துரோகத்திற்கு பிராயச்சித்தம் தேடும் வகையில், எங்களை நோக்கி வருபவர்களுக்கு வழிவிட்டு விலகி நிற்க வேண்டும். எங்கள் அணிக்கு வருபவர்களை உங்களால் தடுக்க முடியாது.
சட்டமன்ற வாக்கெடுப்பின் போது எங்கள் சிலீப்பர் செல்கள் வெளிப்படுவார்கள். ஜனவரி 20 ந்தேதிக்குள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வரும். இவ்வாறு அவர் கூறினார்.