

சென்னை,
வருவாய் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் கொள்கை பிடிப்பும், மு.க.ஸ்டாலினின் செயல்திறனும் ஒருங்கே பெற்று எந்த ஆதிக்கத்துக்கும் அஞ்சாமல் எதையும் துணிவுடன் எதிர்கொள்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். திமுகவின் வயது 75. ஒவ்வொரு வரும் போராட்டங்களில் பங்கேற்று, மக்களுக்காக சிறைக்கு சென்றவர்கள். கொள்கையில் அனைவரிடமும் சிறந்த கட்சி எங்களுடையது.
கடந்த 5 ஆண்டுகளில் 27 லட்சம் பேருக்கு அரசு மனை பட்டா வழங்கியுள்ளோம். சென்னை போன்ற மாநகராட்சிகளில் 30 ஆண்டுகளாக குடியிருப்போருக்கு 77 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கினோம்.
நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் கொரோனா காலத்திலேயே மக்களுக்கு ரூ.4,000 நிவாரணம் வழங்கினோம். ஆனால் தவெக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் எதையும் 3 மாதங்களில் நிறைவேற்றவில்லை. மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 கிடைக்கும், வீட்டில் வேலையில்லாமல் இருந்தால் ரூ. 4,000 கிடைக்கும், சிலிண்டர் கிடைக்கும். இதெல்லாம் நீங்கள் வந்தால் கிடைக்குமா என்று மக்கள் கேட்கின்றனர். ஆனால், இதுவரை எதுவும் கிடைக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீண்டும் வரும்; விழுந்த வேகத்தில் எழுந்து நிற்கும் கட்சி திமுக.. நீங்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது?. அப்பாவை காணோம் என்று சொல்கிறீர்கள்.. அவர் வருகின்ற நேரத்தில் நீங்கள் பல பேர் இங்கே இருக்கமாட்டீர்கள்; நாங்கள் இருப்போம் என்று கூறினார்.
இதற்கு அவை முன்னவர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில், “விஜய் இருக்கும் வரை திமுக மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதில்லை. திமுகவுக்கு இனி எப்போதும் எதிர்க்கட்சி வரிசை தான்.. எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தவரை திமுக மீண்டும் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை திமுக வெற்றிபெறவில்லை என்பது தான் வரலாறு என்று கூறினார்.
எம்.ஜி.ஆர். இருக்கும்போது தான், 1980ல் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. 1986ல் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்று திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு கூறினார். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன், “நீங்கள் (திமுக) நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை கலைத்தீர்கள். அதன் பிறகும் வெற்றி பெற்று நிரந்தர முதல்-அமைச்சராக வரலாறு படைத்தவர் எம்.ஜி.ஆர். என்றார்.