மனநிலை பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற லாரியை தடுத்து கைப்பற்றிய மறைமலைநகர் போலீசாருக்கு பாராட்டு

ஓட்டுநர் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் லாரியில் ஏறி வேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்தது.
மனநிலை பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற லாரியை தடுத்து கைப்பற்றிய மறைமலைநகர் போலீசாருக்கு பாராட்டு
Published on

சென்னை,

மனநிலை பாதிக்கப்பட்டவர் ஓட்டிச் சென்ற லாரியை தடுத்து கைப்பற்றிய மறைமலை நகர் போலீசாருக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"கடந்த 20.5.2025 அன்று காலை 10.15 மணியளவில், டி.9 மறைமலைநகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் லோகேஷ் காந்தி மற்றும் காவலர் 2217 மோகன்ராஜ் ஆகியோர் மஹிந்திரா சிட்டி, ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் வழக்கமான போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து TN 19 AS 4315 என்ற பதிவு எண் கொண்ட டாரஸ் டிப்பர் லாரி எந்த போக்குவரத்து சிக்னலையும் பின்பற்றாமல் பலமுறை எச்சரித்தும் நிறுத்தமால் செல்வதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. காவலர்கள் அந்த லாரியை நிறுத்த முயன்றபோது, அது நிற்காதாதால் அந்த சமயத்தில், மறைமலைநகர் போக்குவரத்து சிறப்பு சா.ஆ. முருகன், லாரியை தடுப்புகள் வைத்து நிறுத்த முயன்றதால், லாரி வேகம் குறைத்தது.

உடனடியாக அவர் லாரியின் படியில் ஏறியுள்ளார். ஆனால் லாரி நிற்காமல் வேகமாக ஓடியதால், அவர் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் படியில் பயணித்துள்ளார். லாரி ஜூனியர் குப்பண்ணா சந்திப்பை நெருங்கும் போது, அது ஒரு தடுப்பில் மோதி நின்றுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் லாரியை ஓட்டிய நபரை பிடிக்க சிறப்பு சா.ஆ. முயன்றபோது, லாரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சிறப்பு சா.ஆ. மற்றும் பொதுமக்களை அந்த ஓட்டுநர் மிரட்டியுள்ளார். இருப்பினும், அவரை பிடித்து T9 மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

விசாரணையில், பரனூர் சுங்கச்சாவடியில் TN 19 AS 4315 என்ற பதிவு எண் கொண்ட டாரஸ் லாரியை அதன் ஓட்டுநர் நிறுத்திவிட்டு கீழே இறங்கி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் லாரியில் ஏறி வேகமாக ஓட்டிச் சென்றது தெரியவந்தது (பின்னர் அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த சுபாஷ் (35) என அடையாளம் காணப்பட்டது). மேற்கண்ட சுபாஷ் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுபாஷை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர்.

முருகன், சிறப்பு சா.ஆ, லோகேஷ் காந்தி, சா.ஆ மற்றும் காவலர் 2217 மோகன்ராஜ் ஆகியோர் விரைவாக செயல்பட்டு அதிவேகமாக சென்ற லாரியை நிறுத்தியுள்ளனர். இந்த காவல் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், சாலையில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

மேற்கண்ட காவலர்களின் விரைவான மற்றும் அர்ப்பணிப்புமிக்க செயலைப் பாராட்டி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com