

சென்னை,
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ. மதன் ராஜா, பூம்புகார் கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக தெலங்கானா மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் (கோல்கொண்டா) விற்பனையகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா, ஐதராபாத்தில், அமைந்துள்ள தெலங்கானா மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் (கோல்கொண்டா) விற்பனையகத்தில் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் (பூம்புகார்) கைவினைப் பொருட்கள் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துவது தொடர்பாக இன்று (20.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக, நேற்று (19.09.2026) தெலங்கானா மாநிலத்தில் ஷில்பராமத்தில் பூம்புகார் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை அமைச்சர் தொடங்கி வைத்தார். அந்நிகழ்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் கதர் துறை அலுவலர்களுடன் கலந்துரையாடி, கைவினைக் கலைஞர்கள் எதிர்கொண்டு வரும் தொழில்சார் இடர்பாடுகள், தேவைகள் மற்றும் சந்தை சார்ந்த சவால்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, கோல்கொண்டா விற்பனையகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு கைவினைப் பொருட்களின் வகைகள், அவற்றின் சிறப்பம்சங்கள், தரம், விலை நிர்ணயம், காட்சிப்படுத்துதல், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அவற்றை விற்பனை செய்வதற்கான நடைமுறைகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் தேவைகள், குறைகள் மற்றும் தொழில்சார் சவால்களைக் கேட்டறிந்தேன். இன்று, கைவினைப் பொருட்கள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன, விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன மற்றும் ஏற்றுமதி சந்தைகளை எவ்வாறு சென்றடைகின்றன என்பதை நேரில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், சர்வதேச சந்தைகளின் தேவைக்கேற்ப கைவினைப் பொருட்களில் மேற்கொள்ளப்படும் வடிவமைப்பு மாற்றங்கள், பொருட்களின் மதிப்புக்கூட்டல், சந்தைப்படுத்துதல் உத்திகள் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விற்பனையக அலுவலர்களுடன் கலந்துரையாடப்பட்டது.
புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாட்டின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள், தமிழ்நாடு தொன்மையான கலை, கைவினை மற்றும் பண்பாட்டுப் பாரம்பரியத்தைப் பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது. மாநிலத்தின் பல்வேறு பாரம்பரிய கைவினைப் பொருட்கள் அவற்றின் தனித்துவம் மற்றும் புவியியல் தோற்றத்திற்காக புவிசார் குறியீடு (Geographical Indication – GI) அங்கீகாரம் பெற்றுள்ளன.
தஞ்சாவூர் ஓவியங்கள், சுவாமிமலை வெண்கலச் சிலைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் கலைத்தட்டு, பட்டமடை பாய்கள், மாமல்லபுரம் கல் சிற்பங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மரச்சிற்பங்கள் உள்ளிட்ட கைவினைப் பொருட்கள் தமிழ்நாட்டின் சிறப்புமிக்க கலை மரபுகளையும், தலைமுறை தலைமுறையாக அவற்றைப் பாதுகாத்து வரும் கைவினைக் கலைஞர்களின் திறனையும் பறைசாற்றுகின்றன.
தமிழ்நாட்டின் பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றுத் தருதல், அவற்றின் தனித்துவத்தைப் பாதுகாத்தல் மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல் ஆகிய பணிகளில் பூம்புகார் நிறுவனம் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வருகிறது.
கைவினைக் கலைஞர்களின் உழைப்பிற்கும் திறமைக்கும் உரிய மதிப்பு புவிசார் குறியீடு என்பது ஒரு பொருளின் தோற்றப் பகுதியையும் அதன் உண்மைத்தன்மையையும் உறுதி செய்யும் அடையாளமாக மட்டுமின்றி, அந்தப் பொருளை உருவாக்கும் கைவினைக் கலைஞர்களின் பாரம்பரிய அறிவு, திறன் மற்றும் உழைப்பிற்கு உரிய மதிப்பை ஏற்படுத்தும் முக்கியக் கருவியாகவும் விளங்குகிறது.
எனவே, புவிசார் குறியீடு பெற்ற தமிழ்நாட்டின் கைவினைப் பொருட்களுக்கு உரிய மதிப்பை உறுதி செய்யும் வகையில், அவற்றின் வடிவமைப்பு, தரம், காட்சிப்படுத்துதல், வர்த்தகப் பெயராக்கம் மற்றும் விலை நிர்ணயம் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சந்தைகளில் அவற்றின் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
செயல்பாடுகள் குறித்து ஆய்வு
தமிழ்நாட்டின் ஒவ்வொரு புவிசார் குறியீடு பெற்ற கைவினைப் பொருளுக்குப் பின்னாலும் நமது கைவினைக் கலைஞர்களின் தலைமுறை தலைமுறையான திறனும் கடின உழைப்பும் உள்ளது. அந்தத் திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய மதிப்பும், அதற்கேற்ற வருமானமும் கைவினைக் கலைஞர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும்.” பூம்புகாரின் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் கோல்கொண்டா கைவினைப் பொருட்கள் விற்பனையகத்தின் செயல்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட இன்றைய ஆய்வின் மூலம் பெறப்பட்ட தகவல்கள், தமிழ்நாட்டில் கைவினைப் பொருட்களின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலை மேலும் வலுப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.
குறிப்பாக, பூம்புகாரின் கைவினைப் பொருட்களின் வகை மற்றும் தரத்தை மேம்படுத்துதல், விற்பனையகங்களின் செயல்பாடுகளை நவீனப்படுத்துதல், கைவினைப் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டல் செய்தல், ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் கைவினைக் கலைஞர்களைத் தேவையான சந்தை இணைப்புகளுடன் ஒருங்கிணைத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு இந்த ஆய்வின் மூலம் பெறப்பட்ட அனுபவங்கள் வழிகாட்டியாக அமையும்.
மேலும், மாநிலம் முழுவதும் உள்ள கைவினைக் கலைஞர்களுக்கு நவீன வடிவமைப்பு, பொருத்தமான விலை நிர்ணயம், தரமான சந்தைப்படுத்துதல் மற்றும் பன்னாட்டு சந்தை வாய்ப்புகள் தொடர்பான தேவையான ஆதரவினை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி, கதர் துறை அலுவலர்கள் மற்றும் கோல்கொண்டா கைவினைப் பொருட்கள் விற்பனையக அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.