'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம்: கள்ளக்காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு: பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளம்பெண்

கள்ளக்காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால் விரக்தி அடைந்த இளம்பெண், கடை வீதியில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
'இன்ஸ்டாகிராம்' மூலம் பழக்கம்: கள்ளக்காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமண ஏற்பாடு: பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த இளம்பெண்
Published on

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் எழில் நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 28). கருத்து வேறுபாடு காரணமாக கணவரைவிட்டு பிரிந்து தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.

இதற்கிடையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 'இன்ஸ்டாகிராம்' மூலம் நந்தினிக்கு, பிராட்வே அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கணவன்-மனைவி போல் ஒன்றாக பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மணிகண்டனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதனால் மணிகண்டன், கள்ளக்காதலி நந்தினியுடன் பேசுவதை தவிர்த்து, அவரிடம் இருந்து விலகினார். நந்தினி போன் செய்தாலும் எடுக்கவில்லை.

கள்ளக்காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடு நடைபெறுவதை அறிந்து மனம் உடைந்த நந்தினி, மணிகண்டன் வேலை செய்யும் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்று அவருடன் தகராறு செய்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது.

ஆத்திரம் அடைந்த நந்தினி, கடை வீதியில் நிறுத்தி இருந்த தனது இருசக்கர வாகனத்தில் தயாராக வாங்கி வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். அதிர்ச்சி அடைந்த மணிகண்டன், நந்தினி உடலில் எரிந்த தீயை அணைத்தார். இதில் அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டு வலியால் அலறினார்.

உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கள்ளக்காதலன் மணிகண்டனிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com