

சென்னை,
தமிழ்நாடு கல்யாண மண்டப உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா ஊரடங்கு காரணமாக பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. திருமண மண்டபங்களுக்கு முன்பதிவு செய்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட முன்பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
திருமண மண்டபத்தை பராமரிப்பது, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு செலவுகள் திருமண மண்டப உரிமையாளர்கள் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. எனவே, முன் பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கக்கூடாது. திருமண மண்டபங்கள் ஊரடங்கு காலத்தில் மூடிக்கிடந்ததால், அதற்கு சொத்துவரி விதிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக அரசு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற நவம்பர் 23-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.