காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை: ரெயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு - மனைவியின் உறவினர்கள் வெறிச்செயல்

நெல்லையில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் ரெயில் தண்டவாளத்தில் வீசப்பட்டு கிடந்தது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவருடைய மனைவியின் அண்ணன்-உறவினர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக்கொலை: ரெயில் தண்டவாளத்தில் உடல் வீச்சு - மனைவியின் உறவினர்கள் வெறிச்செயல்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 52). இவருடைய மனைவி சண்முகத்தாய். இவர் சத்துணவு மையத்தில் சமையலராக வேலை செய்து வருகிறார். இவர்களுடைய 2-வது மகன் நம்பி ராஜன் (23). இவர் அங்குள்ள பால்பண்ணையில் வேலை செய்து வந்தார். நம்பிராஜனுக்கும், அதே ஊரைச் சேர்ந்த தங்கபாண்டி மகள் வான்மதி (19) என்பவருக்கும் காதல் மலர்ந்தது.

இவர்கள் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் வான்மதியின் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து எதிர்ப்பையும் மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நம்பிராஜன், வான்மதியை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சொந்த ஊரில் இருந்தால் பிரச்சினை ஏற்படும் என்று கருதி நெல்லை டவுன் வயல் தெருவில் ஒரு வாடகை வீட்டில் புதுமண தம்பதி குடியேறினர்.

இவர்கள் குடியேறிய தெரு பகுதியில் மறுகால்குறிச்சியை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்பவரும் வசித்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்பிராஜன், வான்மதியை பார்த்தார். அப்போது, முத்துப்பாண்டியன் 2 குடும்பத்துக்கும் இடையே உள்ள பிரச்சினைகளை பேசி சமாதானம் செய்வதாக வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டியன் செல்போன் மூலம் நம்பிராஜனை தொடர்பு கொண்டார். அப்போது, டவுனில் இருந்து குறுக்குத்துறை செல்லும் ரோட்டில் உள்ள ரெயில்வே கேட் பகுதியில் நிற்பதாகவும், அங்கு வந்தால் பேச்சுவார்த்தை நடத்தி விடலாம் என்றும் கூறினர்.

இதை உண்மை என்று நம்பிய நம்பிராஜன் தனது மனைவி வான்மதியிடம் விஷயத்தை கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. கணவரை காணாமல் தவித்த வான்மதி, தனது மாமனார் அருணாசலத்தை தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை கூறினார். உடனடியாக அருணாசலம் டவுனுக்கு புறப்பட்டு வந்தார். அவர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடனடியாக போலீசார் குறுக்குத்துறை ரெயில்வே கேட் பகுதிக்கு சென்றனர். அங்கு நம்பிராஜனின் மோட்டார் சைக்கிள் மட்டும் தனியாக நிற்பதை கண்டனர். இதையடுத்து அந்த பகுதி முழுவதும் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது ரெயில்வே தண்டவாளத்தில் நம்பிராஜன் தலை துண்டாகி பிணமாக கிடப்பதை போலீசார் பார்த்தனர். மேலும், அவரது உடலில் பல்வேறு இடங்களிலும் வெட்டுக்காயங்கள் இருந்தன.

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, முத்துப்பாண்டியன் பேச்சுவார்த்தைக்காக அழைத்ததை உண்மை என்று நினைத்து ரெயில்வே கேட் பகுதிக்கு நம்பிராஜன் சென்றார். அப்போது, அங்கு வான்மதியின் உறவினர்கள் பயங்கர ஆயுதங்களுடன் காத்திருத்து உள்ளனர்.

அவர்களை கண்ட உடன் நம்பிராஜன் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர்கள் துரத்திச் சென்று நம்பிராஜனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் கொலையை மறைக்க திட்டமிட்டுள்ளனர். நம்பிராஜனின் உடலை நெல்லை டவுன்-சந்திப்பு ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள தண்டவாளத்துக்கு சுமந்து சென்றனர். சிறிது தூரம் சென்ற பிறகு தண்டவாளத்தின் ஒரு பகுதியில் குறுக்காக உடலை போட்டு விட்டு தப்பிச் சென்று உள்ளனர். அந்த சமயத்தில் நெல்லை சந்திப்பில் இருந்து பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துள்ளது. ரெயில் நம்பிராஜன் மீது ஏறிச்சென்றதில் அவரது தலை துண்டானது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வான்மதியின் அண்ணன் செல்லச்சாமி (26), உறவினர்கள் செல்லத்துரை (24), முருகன் (25) மற்றும் முத்துப்பாண்டியன் உள்பட சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட நம்பிராஜன் மீது நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதேபோல் அவருடைய குடும்பத்தினர் மற்றும் வான்மதி குடும்பத்தினர் மீதும் வழக்குகள் உள்ளன.

இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com